தாம் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக வேண்டுமா என்பதை ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகளில் ஒருவர் நடிகர் விஜய். இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
வழக்கமாக விஜய் நடிக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பெரியளவில் நடைபெறும். அதில் விஜய்யின் கருத்துகள் ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் தளத்திலும் விவாதத்தை உண்டாக்கும். ஆனால் பீஸ்ட்-க்கு அப்படியொரு நிகழ்ச்சி இல்லாத சூழலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் அளித்த பேட்டியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியில் பீஸ்ட் பட இயக்குநர் நெல்சனிடம் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலை தந்துள்ளார் விஜய். தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றும், கோவில், தர்கா, தேவாலயங்களுக்கு சென்றுள்ளேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். அண்மைக்காலமாக தனது தந்தையுடன் விஜய் பேசுவதில்லை என தகவல் வெளியான நிலையில், தந்தை குறித்து பேசிய அவர், அப்பாக்கள் ஒரு குடும்பத்தின் வேர் என்றும் கடவுள் கண்களுக்கு தெரியமாட்டார், அப்பா கண்களுக்கு தெரிவார், இதுவே அப்பாவுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் கூறி நெகிழவைத்தார்.
தனது மகன் சஞ்சய் நடிக்கப்போகிறாரா அல்லது கேமராவுக்கு பின்னால் இருந்து செயல்பட போகிறாரா என தெரியவில்லை, இதற்காக தானும் காத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். சஞ்சையை தேடி படவாய்ப்புகள் வருவதாகவும் விஜய் கூறினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சைக்கிளில் சென்று வாக்களித்தது பலவித விவாதங்களை அப்போது உண்டாக்கியது. ஆனால், எதார்த்தமாகவே சைக்கிளில் சென்றதாகவும் அதில் எந்த உள்நோக்கமும் இல்லையென்றும் கூறி பலரது யூகங்களுக்கு தற்போது முடிவு கட்டியுள்ளார் விஜய். அதோடு அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருவதாகவும் அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தன்னை தளபதியாக மாற்றியது ரசிகர்கள் தான் என்று கூறிய விஜய், நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பதில், நடிகர் விஜயின் எதிர்கால திட்டத்திற்கான தொடக்கப்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.