தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 11-ம் தேதி மாமன்ற முதல்சாதாரண கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
புறநகரில், ஐந்து நகராட்சி,5 பேரூராட்சி ஆகியவற்றை இணைத்து, புதியதாக தாம்பரம்மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 70 வாா்டுகளில் போட்டியிட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 56 வார்டுகளில் வெற்றி பெற்றது. 9 வார்டுகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சி திமுக வசமானது. அதைத் தொடா்ந்து, திமுகவைச் சேர்ந்த வசந்தகுமாரி மேயராகவும், ஜி. காமராஜ் துணை மேயராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல, மண்டலகுழுத் தலைவர்கள், பல்வேறு குழுஉறுப்பினா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மேயர், துணை மேயர் பொறுப்பேற்ற பிறகு வரும் 11-ம் தேதி மேயா் வசந்தகுமாரி தலைமையில் (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு, மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்ற முதல் சாதாரண கூட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி கூட்ட அரங்கம் தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கூட்டத்தில், உறுப்பினர்கள்விவாதத்துக்கு 171 பொருள்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவசர கூட்டமும் நடைபெறுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட மன்ற பொருள் கொண்டு வரப்பட உள்ளது. குடிநீர், கழிவுநீர், மாநகராட்சி கடைகளுக்கு ஏலம் விடுதல், தேர்தல் செலவினம், பதவி ஏற்பு செலவினம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் தொடர்பான மன்றப் பொருள் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் மாநகராட்சி என தனியாக சின்னம் (லோகோ) தயாரிக்கப்பட்டு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
மனுக்கள் அளித்தும் பலனில்லை
இந்நிலையில் மாமன்ற உறுப்பினர்களின் வார்டு பிரச்சினைகள் தொடர்பாக எந்த கருத்தையும் மேயர் கேட்கவில்லை என்பதாலும், பல்வேறு வார்டு வளர்ச்சி பணி தொடர்பான மனுக்கள் அளித்தும் மன்ற கூட்ட பொருளில் வைக்கப்படவில்லை என்பதாலும், பல்வேறு உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே முதல் மன்றத்தில் காரசாரமான விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.