சேலம்: டீசல் விலை தினந்தோறும் உயர்த்தப்படுவதால், வாடகை இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வடமாநிலங்களுக்கு லாரிகள் இயக்கம் 30 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது, என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் சென்னகேசவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சுமார் 4.60 லட்சம் லாரிகள் உள்ளன. இதில், 1.50 லட்சம் லாரிகள் வெளிமாநிலங்களுக்கு செல்லும், ‘நேஷனல் பர்மிட்’ பெற்று இயங்குகின்றன. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக லாரித் தொழிலில் நீடித்த பாதிப்பு சீரடைந்து வரும் நிலையில், தற்போது டீசல் விலை உயர்வு லாரித் தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
டீசல் விலை தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருவதால், நேற்று நிர்ணயித்த வாடகையை விட அடுத்த நாள் கூடுதலாக வாடகையை வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், வாடிக்கையாளருடனான உறவு பாதிக்கப்படுகிறது. உள்ளூரில் இயக்கப்படும் லாரிகளுக்கான வாடகை வசூலிப்பில் பெரிய அளவில் சிக்கல் ஏற்படுவதில்லை.
ஆனால், வடமாநிலங்களுக்கு லாரிகள் சென்று வருவதற்கு குறைந்தது 10 நாட்கள் ஆகிறது. எனவே, 10 நாட்களுக்குள் டீசல் செலவு சில ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து, லாரி உரிமையாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால், கடந்த 15 நாட்களாக, தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு 30 சதவீதம் லாரிகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சுங்கக் கட்டணமும் அதிகரித்துள்ளதால், லாரி உரிமையாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜன்ட்டுகள் சம்மேளன மாநிலத் தலைவர் ராஜவடிவேலு கூறும்போது, “கடந்த ஒரு மாதத்தில் டீசல் விலை ரூ.11 வரை அதிகரித்துள்ளது. தினமும் டீசல் விலை மாறுவதால் சரக்குகளுக்கான லாரி வாடகையை நிர்ணயிக்க முடியாமல், தினந்தோறும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே, டீசல் விலை உயர்வை 3 மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வடமாநிலங்களுக்கு லாரிகள் சென்று வருவதற்கு குறைந்தது 10 நாட்கள் ஆகிறது. 10 நாட்களுக்குள் டீசல் செலவு சில ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து இழப்பை ஏற்படுத்துகிறது.