பீகாரில் 500 டன் எடை கொண்ட பாலம் திருடப்பட்ட சம்பவத்தில் நீர்வளத் துறையின் துணைப் பிரிவு அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் நாசிரிங்க் பகுதியில் ஆற்றை கடந்து செல்ல 60 அடி நீள இரும்புப் பாலம் ஒன்று இருந்தது. கடந்த 1966ம் ஆண்டு வரை இந்த பகுதியில் பாலம் இல்லாமல் மக்கள் படகில் தான் பயணம் செய்து வந்தனர். அப்பொழுது ஏற்பட்ட ஒரு படகு விபத்தில் படகில் சென்றவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு பிறகு கடந்த 1972ம் ஆண்டு இப்பகுதியில் இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பின் அந்த ஆற்றில் படகு சேவை நிறுத்தப்பட்டு மக்கள் இரும்பு பாலத்தையே பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
நாளடைவில் அந்த இரும்பு பாலமும் சேதமடைந்த நிலையில் அப்பகுதியில் கான்கிரீட் காலம் ஒன்று இரும்பு பாலத்தை ஒட்டியே அமைக்கப்பட்டது. கான்கிரீட் பாலம் வந்ததும் மக்கள் எல்லோரும் புதுப் பாலத்தை மட்டுமே பயன்படுத்தினர். இரும்பு பாலம் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் போனது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் இந்த வழியாக மக்கள் சென்ற போது அங்கிருந்த இரும்பு பாலம் முழுவதுமாக காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். 10 அடி அகலம், 12 அடி உயரம், 60 அடி நீளத்தில் இருந்த இரும்பு பாலம் மொத்தமாக காணாமல் போய்விட்டதால், பொதுமக்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
பின்னர் நடந்த விசாரணையில் இந்த திருட்டு பட்டப்பகலில் தான் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. நீர்ப்பாசனத் துறையுடன் இணைந்து பணியாற்றும் அரசு அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட கொள்ளையர்கள் சிலர், கைவிடப்பட்ட பாலத்தை உடைக்க எரிவாயு கட்டர் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து உழைத்து பாலத்தை அகற்றியுள்ளனர். பாலத்தை அகற்ற கிராம மக்கள் நீர்ப்பாசனத்துறையிடம் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளதால் அதிகாரிகள் உண்மையிலேயே வந்து அகற்றுவதாக நினைத்து விட்டதாக பொதுமக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தற்போது இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நீர்வளத் துறையின் துணைப் பிரிவு அதிகாரி (எஸ்டிஓ) உட்பட எட்டு பேரை பீகார் காவல்துறை கைது செய்துள்ளதாக காவல்துறை கண்காளிப்பாளர் ஆஷிஷ் பார்தி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் மற்றும் பிற பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM