திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் மற்றும் கோதண்ட ராமர் கோவில் சத்திரம் ஆகிய 3 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது. கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
இதனால் கடந்த சனி, ஞாயிறு, இன்று, நாளை ஆகிய 4 நாட்களுக்கான இலவச தரிசனங்கள் டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டு விட்டது.
இதனால் கடந்த சனிக்கிழமை டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டது. தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் 3 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல்வேறு மாநிலங்களிலிருந்து நடைபயணமாகவும், வாகனங்களிலும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
இலவச தரிசன டிக்கெட் பெற வந்த பக்தர்கள் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது செவ்வாய்க்கிழமை கவுண்டர் திறக்கப்பட்டு புதன்கிழமைக்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
தரிசன டிக்கெட்டுகள் கிடைக்காததால் விரக்தி அடைந்த பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில பக்தர்கள் வாகனங்கள் செல்லாதவாறு சாலையில் படுத்து போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மனோகர், விஸ்வநாத் ஆகியோர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பக்தர்கள் நீண்ட தொலைவிலிருந்து குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு வந்துள்ளோம். 3 நாட்கள் காத்திருந்து எங்களால் தரிசனம் செய்ய இயலாது.
எனவே இலவச தரிசன டிக்கெட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை திருமலைக்கு அனுமதித்தால் கோவில் முன்பாக தேங்காய் உடைத்து தரிசனம் செய்துவிட்டு சென்று விடுவதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஏராளமானோர் திருமலையில் காத்திருப்பதால் அங்கு உங்களால் தங்க இயலாது.
எனவே திருப்பதியில் தங்கியிருந்து டிக்கெட் பெற்று தரிசனத்திற்கு வருமாறு தெரிவித்தனர். இதையடுத்து ஒரு சில பக்தர்கள் அலிபிரியிலேயே விடிய விடிய காத்திருந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.