திருப்பத்தூர் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள், 'சாசனக்கல்' கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் மற்றும் சோழர்கால ‘சாசனக்கல்’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், ஆண்டியப்பனூருக்கு அருகே ஊர்மேடு என்ற இடத்திலுள்ள மலைக்குன்றில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் இருப்பதும், மேலும் சோழர்காலத்தைய ‘சாசனக்கல்’ ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், துாய நெஞ்ச கல்லுாரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் சந்தோஷ், சரவணன் உள்ளிட்டோர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு வரலாற்று தடயங்களை கண்டறிந்த இந்த ஆய்வுக்குழுவினர் அவற்றை மக்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அருகேயுள்ள ஊர்மேடு கிராமத்தில் அமைந்துள்ள மலைக்குன்றி ஆய்வு மேற்கொண்டபோது அங்கு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகளும், சோழர்காலத்தைச் சேர்ந்த ‘சாசனக்கல்’ இருப்பதை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

சாசனக்கல்

இது குறித்து முனைவர்.ஆ.பிரபு கூறியது: ”திருப்பத்துார் மாவட்டம் ஆண்டியப்பனுாரில் ஏற்கெனெவே பல வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆண்டியப்பனுாரில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள ‘ஊர்மேடு’ என்ற இடத்தின் அருகே ‘சின்னப்பாண்டவர் குட்டை’ என்ற இடம் குறித்த தகவல் எங்கள் குழுவுக்கு கிடைத்தது. உடனே, நாங்கள் அங்கு சென்றோம். அங்குள்ள சிறிய மலைக்குன்றில் ஆய்வு செய்தபோது அங்கு, 15க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் இருப்பதை கண்டறிந்தோம். மேலும், இப்பகுதியில் ஓடும் காட்டாற்றின் அருகே ‘சாசனக்கல்’ என்ற இவ்வூர் மக்களால் அழைக்கப்படும் எல்லைக் கல் (சூலக்கல்) ஒன்று இருப்பதையும் கண்டறிந்தோம்.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள்

இங்குள்ள கற்திட்டைகள் கரடுமுரடான கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பாறைகளில் இருந்து வெட்டி யெடுக்கப்பட்ட பெரிய பலகைக் கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கல்லறை அமைப்பே கற்திட்டைகள் (Dolmens) என்று அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி மற்றும் முல்லை போன்ற நிலப்பகுதிகளில் இது போன்ற கற்திட்டைகளை அமைப்பதற்குத் தேவையான மூலப்பொருளான கற்கள் எளிதில் கிடைப்பதால் இவ்விரு நிலப்பகுதிகளிலும் பெருங்கற்சின்னங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் கற்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஏராளமாகக் கண்டறியப்படுள்ளன.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தை கற்திட்டைகள்

திருப்பத்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட இப்பகுதியானது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம் காண இது போன்ற வரலாற்றுத் தடயங்கள் நமக்கு உதவுகின்றன. அதேபோல, அங்குள்ள அடர்ந்த முட்புதருக்குள் இருந்த சாசனக்கல்லினைத் தேடிக் கண்டறிந்து சுத்தம் செய்த போது அங்கு ‘சூலக்கல்’ இருப்பதைக் காண முடிந்தது. அந்த கல்லில் திரிசூலம் கோட்டுருவ அமைப்பில் நடுவில் செதுக்கப்பட்டு அதன் இருபுறமும் சூரியன், பிறை நிலவு வடிக்கப்பட்டுள்ளன.

கீழ்ப்புறம் உடுக்கை வடிவம் காட்டப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் சைவத் திருக்கோவில்களுக்கு நிலக்கொடை வழங்கியதைக் குறிக்கவோ அல்லது சைவத் திருக்கோவிலுக்குரிய நில எல்லையினைக் குறிக்கவோ நடப்படுவதாக இருக்கும். இந்த கல்லானது சோழர்காலத்தைச் சேர்ந்ததாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனுாரில் ஏற்கெனவே 2-ம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் முந்தைய காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதற்குச் சான்றாக இக்கல்லும் இப்பகுதியை ‘ஊர்மேடு’ என்ற பெயரும் தக்க சான்றுகளாக அமைகின்றன. இது போன்ற அரிய வரலாற்று தடயங்களை உலக மக்களுக்கு எடுத்துக்கூற தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.