திருவண்ணாமலை: பெற்றோர் தவறியதால் தம்பியின் கல்விக்காக டிராக்டர் ஓட்டும் 19 வயது அண்ணன், தனது தம்பிக்காக ஆதரவு கரம் நீட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பெரணமல்லூர் அருகே பெற்றோரை இழந்துவிட்டதால் தம்பியின் கல்விக்கு தோள் கொடுக்க, தனது உயர் கல்வி ஆசையை துறந்து டிராக்டர் ஓட்டும் பணியில் அண்ணன் ஈடுபட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த பெரியகொழப்பலூர் அருகே இமாபுரம் கிராமத்தில் வசித்தவர் டிராக்டர் ஓட்டுநர் பூபாலன். இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 04-05-21-ம் தேதி உயிரிழந்தார். இயைடுத்து, தங்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் உழுது, ராஜாமணி மற்றும் ராஜ்குமார் ஆகிய இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த, அவரது மனைவி பச்சையம்மாள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடந்த 07-02-22-ம் தேதி உயிரிழந்தார். தாய், தந்தையை அடுத்தடுத்து இழந்த ராஜாமணியும் (19), ராஜ்குமாரும் (14) ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதே கிராமத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த தாத்தா கிருஷ்ணன், பாட்டி அமராவதி, தங்களது பேரப்பிள்ளைகளை அரவணைத்தாலும், பெற்றோருக்கு ஈடாக பாதுகாக்க முடியவில்லை. குடிசை வீட்டில் வசிக்கும் அண்ணன், தம்பிக்கு அடுத்த வேளை உணவு என்பது கேள்விக்குறியானது.
பெரியகொழப்பலூர் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தனது தம்பி ராஜ்குமாரின் கல்வி பாதிக்கக்கூடாது, பசியாலும் வாடி விடக்கூடாது என்பதற்காக, தந்தையின் வழியில் டிராக்டர் ஓட்டும் பணியில் ராஜாமணி ஈடுபட்டுள்ளார். இவர், பிளஸ் 2 வகுப்பு வரை படித்துள்ளார். உயர் கல்வி படிக்க வேண்டும் என விருப்பம் இருந்தாலும், தம்பியின் கல்விக்கு தோள் கொடுக்க, தனது கனவை துறந்து டிராக்டர் ஓட்டி வருகிறார். இதன்மூலம் கிடைக்கும் கூலியை கொண்டு, அவர்கள் இருவரும் பசியாற்றிக் கொள்கின்றனர்.
தம்பியின் படிப்பு பாதிக்கக்கூடாது: இது குறித்து ராஜாமணி கூறும்போது, ”தாய், தந்தை இருவரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயிரிழந்துவிட்டனர். நாங்கள் இருவரும் ஆதரவற்றுள்ளோம். வயதான தாத்தா, பாட்டி ஆகியோர் இதே கிராமத்தில் வசிப்பதால், சற்று ஆதரவாக இருக்கிறது. தாத்தாவும் கூலி வேலை செய்வதால், அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க எனக்கு மனமில்லை. இதனால், தந்தையை போன்று டிராக்டர் ஓட்டி வருகிறேன். டிராக்டர் ஓட்டினால் ரூ.350 கிடைக்கும். இந்த கூலியும் தினசரி கிடைக்காது. கிடைக்கும் கூலியை கொண்டு பசியாற்றி கொள்கிறோம்.
எனது தம்பி ராஜ்குமார், 9-ம் வகுப்பு படிக்கிறான். அவனது படிப்பு தொடர வேண்டும். என்னை போன்று அவனது படிப்பும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால், நான் டிராக்டர் ஓட்டுகிறேன். எனக்கும் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என விருப்பம் உள்ளது. ஆனால், சூழ்நிலை சரியில்லை. எங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நாங்கள் இருவரும் வசிக்கும் குடிசை வீடு, எப்போது வேண்டுமானாலும் சாய்ந்துவிடும். குடிசை வீட்டின் மீது பிளாஸ்டிக் ஷீட்டை கொண்டு மூடி, மழை மற்றும் வெயிலுக்கு பாதுகாத்து வருகிறோம். எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் உதவிட வேண்டும். மேலும் எனது தம்பி, உயர் கல்வி வரை படிக்கவும் உதவ வேண்டும்” என்றார்.
அண்ணன்தான் உலகம்: தம்பி ராஜ்குமார் கூறும்போது, ”தாய், தந்தையாக இருந்து எனது அண்ணன் என்னை பார்த்துக் கொள்கிறான். அவன் டிராக்டர் ஓட்டினால்தான், எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். அவன்தான் எனக்கு உலகம்” என்றார்.