கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அலுமினிய குண்டானை இரிடியம் எனக் கூறி ஏமாற்றி 3 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அலுமினிய பாத்திரத்துக்குள் பேட்டரியால் இயங்கும் மோட்டாரைப் பொருத்தி, ஷாக் அடிக்க வைத்த சதிகாரர்கள் பின்னணியை இந்த செய்தித் தொகுப்பு விவரிக்கிறது.
ராணிப்பேட்டை அருகே உள்ள சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜாகிர். சென்னையில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வரும் இவருக்கு, தாம்பரத்தை சேர்ந்த ராஜன், நெய்வேலியை சேர்ந்த உலகநாதன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
தங்களிடம் விலை மதிப்பில்ல இரிடியம் உள்ளதாகவும் , பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதனை குறைந்த விலைக்கு வாங்கினால் கோடிக்கணக்கில் விற்று பணம் சம்பாதிக்கலாம் என ஜாகிருக்கு ஆசை காண்பித்துள்ளனர்.
3 லட்ச ரூபாய்க்கு இரிடியம் விலை பேசப்பட்ட நிலையில் முதல் தவணையாக ராஜன் மூலம் ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை உலகநாதனிடம் கொடுத்துள்ளார் ஜாகிர்.
சனிக்கிழமை நெய்வேலியிலுள்ள பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து மீதி பணத்தைக் கொடுத்துவிட்டு இரிடியத்தை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
அதன்படி அங்கு சென்ற ஜாகிரிடம், சதுர வடிவிலான கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட கருப்பு வர்ணம் பூசப்பட அலுமினியக் குண்டான் ஒன்றைக் காண்பித்து அதுதான் இரிடியம் என்று கூறியுள்ளனர்.
கண்ணாடிப் பெட்டியை ஜாகிர் தொட்டுப் பார்த்தபோது ஷாக் அடிப்பது போல உணர்ந்துள்ளார். அதுகுறித்து கேட்டபோது இது சக்திவாய்ந்த, அபூர்வமான இரிடிய பாத்திரம், என்றும் அதனால்தான் தொட்டவுடன் ஷாக் அடிப்பதாகவும் கூறியுள்ளனர். மீதிப்பணத்தைக் கொடுத்துவிட்டு அதனை வாங்கிக் கொள்ளுமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஜாகிர் , தற்போது பணம் கொண்டு வரவில்லை என்றும் இரிடியத்தை தன்னிடம் கொடுத்தால் பணத்தை பின்னர் அனுப்பி விடுவதாக தெரிவித்துள்ளார். அவர் மீது சந்தேகம் கொண்ட உலகநாதனும் பாலசுப்பிரமணியனும் பணம் எடுத்து வராமல் ஏன் வந்தாய் என்று கேட்டதோடு, இரிடியத்தைத் தொட்டுவிட்டதால் அதனை வாங்கியே தீர வேண்டும் என்றும் கூறி கட்டாயப்படுத்தி மிரட்டியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிய, இருவரும் சேர்ந்து ஜாகிரைத் தாக்கியுள்ளனர். தன் மீதான தாக்குதல் குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஜாகிர் புகாரளித்துள்ளார்.
விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய குண்டர்களான உலகநாதனையும் பாலசுப்பிரமணியனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இரிடியம் என்று கூறி அவர்கள் காண்பித்தது வெறும் கருப்பு வர்ணம் பூசப்பட்ட அலுமினியப் பாத்திரம் என்பதும் அந்தப் பாத்திரத்துக்குக் கீழே பேட்டரியால் இயங்கும் சிறிய மோட்டாரைப் பொருத்தி ஷாக் அடிக்க வைத்ததும் தெரியவந்தது
இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட உலகநாதனையும் பாலசுப்பிரமணியனையும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூட்டாளி ராஜனை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
தங்கம், வெள்ளிக்கு இணையான மதிப்பெல்லாம் ஒரு போதும் இரிடியத்திற்கு கிடையாது என்று சொல்லும் போலீசார் , பலகோடி ரூபாய் இருடியம் இருப்பதாக யாராவது சொன்னால் அவர்கள் மோசடி பேர்வழிகள் என்று எச்சரிக்கின்றனர்.