இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்கள் அங்கு நிலவும் சூழல் குறித்து வேதனையுடன் பேசியுள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன.
கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நேற்றும் இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்தனர்.
முல்லைத்தீவில் இருந்து வந்த சுசீலா அழுதபடி கூறுகையில், எனது கணவர் இரும்பு பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன. குழந்தைகளுக்கான பால் பவுடர், மருந்து பொருட்கள் கூட கிடைக்காமல் கடுமையாக கஷ்டப்பட்டோம். குழந்தைகளை காப்பாற்றி உயிர் வாழ்வதற்காகவே படகோட்டிகளுக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்து இங்கு வந்துள்ளோம்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ஆகியோரின் குடும்ப அரசியலே முக்கிய காரணம் என கூறினார்.
வவுனியாவில் இருந்து 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் வந்த கோடீஸ்வரன் என்பவர் கூறுகையில், இலங்கையில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். விவசாயம் செய்வதற்கு விதைகள், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்காததால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
எனது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சூழ்நிலையில் மிகுந்த கவனத்தோடு அவரை கவனிக்க வேண்டும். இதனால் மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்து அந்த பணத்தின் மூலம் படகில் ஏறி இங்கு வந்து சேர்ந்துள்ளோம் என கூறியுள்ளார்.