ஏப்ரல் 13 அன்று நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “பீஸ்ட்” வெளியாக உள்ள நிலையில், கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை விஜய் நடித்த படம் வெளியாகும் போதும் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். தனது ரசிகர்களின் நெஞ்சில் ‘தளபதி’யாக குடியிருப்பவர். ஏப்ரல் 13 அன்று நெல்சன் இயக்கத்தில் வெளியாக உள்ள “பீஸ்ட்” படம் குறித்த டாக்தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரல் டாக்காகி உள்ளது. படக்குழுவும் படத்தின் பாடல்கள், பிஜிஎம், பர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் என தொடர்ச்சியாக பல அப்டேட்களை வெளியிட்டு படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விஜய் படம் என்றாலே ப்ரமோஷனுக்கு ஆடியோ லாஞ்ச் வைப்பார்கள், ஆனால் பீஸ்ட்-க்கு ஆடியோ லாஞ்ச் வைக்கப்பட வில்லை. அந்த குறையை தீர்க்கும் வகையில் நடிகர் விஜயிடம் இயக்குநர் நெல்சன் நடத்திய நேர்காணல் நேற்று ஒளிபரப்பாகி, இன்று சமூக வலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டது. எல்லா விஜய் படங்களைப் போலவும் இந்த படங்களுக்கும் சர்ச்சைகள் எழுந்தன. கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் பீஸ்ட் படத்தை திரையிட தடை விதிக்கப்ப்ட்டுள்ளது.
விஜய் படங்கள் வெளியீட்டிற்கு தயாராவதும், அதன் பின் திடீர் சர்ச்சையில் சிக்குவதும் தொடர்கதையாகி விட்டது. இது தொடர்பான ஒரு குட்டி ஸ்டோரி இதோ!
துப்பாக்கி – 2012: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘துப்பாக்கி’. இதில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டன. அதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. தொடர்ந்து சில காட்சிகளும், வசனங்களும் கட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தலைவா – 2013: ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான படம் ‘தலைவா’. இந்த படத்திற்கு தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக- வின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழகத்தை தவிர உலகம் முழுவதும் வெளியானது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 20 அன்று தலைவா தமிழகத்தில் வெளியானது. TIME TO LEAD மாதிரியான கேப்ஷன்களும் நீக்கப்பட்டன.
கத்தி – 2014: மீண்டும் ஏ.ஆர். முருகதாஸுடன் விஜய் இணைந்த படம் ‘கத்தி’. தயாரிப்பாளர், கதை என பலவும் சர்ச்சையாகின. இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் இந்த படத்தை தயாரித்ததால் எதிர்ப்புகள் கிளம்பின. அந்த சிக்கலை எல்லாம் சுமூகமாக கடந்து இந்த படம் தீபாவளி வெளியீடாக வெளியாகி இருந்தது. 2015இல் வெளியான ‘புலி’ திரைப்பட ரிலீஸை ஒட்டி நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரைடும் நடந்தது.
மெர்சல் – 2017: அட்லீ இயக்கத்தில் வெளிவந்தப் படம் ‘மெர்சல்’. படத்தின் தலைப்பு, வெளியீடு, பாஜக-வின் எதிர்ப்பு, மருத்துவர்களின் எதிர்ப்பு என இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. குறிப்பாக படம் வெளியாவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எதிர்ப்புகளை தொடர்ந்து சில காட்சிகளும் நீக்கப்பட்டன.
சர்கார் – 2018: மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம். படத்தை கதை திருடப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டு படம் வெளியாவது உறுதி இல்லாமல் இருந்தது. ஒருவழியாக படம் வெளியான பிறகு அரசு கொடுத்த இலவசங்கள் எதிர்ப்பு மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் பயன்படுத்தப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து அந்தக் காட்சிகள் மியூட் செய்யப்பட்டன.
மாஸ்டர் – 2020 / 2021: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உட்பட பெரிய நட்சத்திர கூட்டணி இந்தப் படத்தில் நடித்தனர். 2020 சித்திரை திங்களுக்கு இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த முறை விஜய் படத்திற்கு கொரோனா தடை விதித்தது. அனைத்தும் சரியான பிறகு படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்தது. அரசும் மக்கள் கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என சொல்லியது. திரை அரங்குகளும் திறக்கப்பட்டன. அதையடுத்து வரும் தை பொங்கலுக்கு மாஸ்டர் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதே விஜய் வருமான வரித்துறையினரால் நெய்வேலியிலிருந்து சென்னைக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் பல மணி நேரம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
பீஸ்ட் 2022: நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு குவைத், கத்தார் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் பீஸ்ட் படம் வெளியிடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக், பாமக சிறுபான்மை பிரிவு ஆகிய கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த இடையூறுகளை எல்லாம் கடந்து ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது “பீஸ்ட்”.