திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான பின்பு திலீப், வழக்கின் சாட்சிகளை கலைத்ததாக புகார் எழுந்தது.
மேலும் விசாரணை அதிகாரிகளை மிரட்டிய தாகவும் குற்றம்சாட்டப் பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் திலீப்பிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது திலீப்பின் செல்போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். செல்போனில் இருந்த பல தகவல்களை திலீப் அழித்திருந்தது தெரிய வந்தது. அந்த தகவல்கள் தனது தனிப்பட்ட தகவல்கள் என திலீப் கூறினார்.
ஆனால் போலீசார் சைபர்கிரைம் நிபுணர்கள் துணையுடன் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுத்து ஆய்வு செய்தனர். இதில் சில முக்கிய நபர்களுடன் திலீப் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் நடிகர் திலீப்பின் 2-வது மனைவியான நடிகை காவ்யாமாதவனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமாக நடிகை காவ்யாமாதவன் சிலரிடம் தகவல் பரிமாற்றம் செய்திருப்பதையும் போலீசார் தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து நடிகை காவ்யாமாதவனை இன்று விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். நடிகை காவ்யாமாதவனிடம் விசாரணை நடத்தினால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வர இயலாது என நடிகை காவ்யாமாதவன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அனுப்பி உள்ளார். இப்போது சென்னையில் இருப்பதால் விசாரணைக்கு வரமுடியாது எனவும், வருகிற 13-ந்தேதி தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்திக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சுவாரியரிடம் போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.