பெங்களூரு : பாதசாரிகள் ஆபத்தின்றி சாலையை கடக்கும் நோக்கில் கட்டப்பட்ட நடை மேம்பாலத்தை நிர்வகிப்பதில், பெங்களூரு மாநகராட்சி அலட்சியம் காண்பிக்கிறது.பெங்களூரின் மைசூரு சாலையில், பேட்ராயனபுரா அருகில் காளி ஆஞ்சனேயர் சுவாமி கோவில் அருகில், மக்கள் சாலையை கடக்க நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது ஆஞ்சனேயர் கோவிலில், திருவிழா நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நடை மேம்பாலத்தின் ‘லிப்ட்’ பழுதடைந்துள்ளது. இதை சரி செய்யாமல், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காண்பிக்கின்றனர்.மாலையில் ரத உற்சவம், திருவிழா நடக்கும் போது மட்டும் வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. காலை முதல் மதியம் வரை, வாகனங்கள் சாலையில் இயங்குகின்றன.நடை மேம்பாலத்தின் ‘லிப்ட்’ பழுதடைந்ததால், மூத்த குடி மக்கள், சிறு பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள், சாலையை கடக்க அவதிப்படுகின்றனர்.சாலையை கடக்கும் போது, வாகனம் மோதி பாதசாரிகள் காயமடைந்த விபத்துகளும் நடந்துள்ளன. லிப்ட்டை உடனடியாக சரி செய்யும்படி, மக்கள் வலியுறுத்துகின்றனர்.மைசூரு சாலையின், குட்டதஹள்ளி அருகில், கோபாலன் மால் முன்பகுதி நடைபாதை மேம்பாலத்தின் லிப்ட்டும் பழுதடைந்துள்ளது. ஒன்றரை மாதமாகியும், இதை சரி செய்யவில்லை. நடை மேம்பாலத்தை தவிர்த்து, சாலையை கடக்கின்றனர்.கோடிக்கணக்கான ரூபாய் செலவில், நடை மேம்பாலத்தை கட்டும் மாநகராட்சி, இவற்றை நிர்வகிப்பதில் இடறுகிறது. இதனால் பாதசாரிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, சாலையை கடக்கின்றனர்.
Advertisement