வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-நாட்டில், 18 – 59 வயதுடையோருக்கு, முதல் நாளில், 9,674 முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும், ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின், ‘கோவாக்சின்’ தடுப்பூசியும், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல, 12 – 14 வயதுள்ள சிறாருக்கு, ‘பயாலஜிக்கல் – இ’ நிறுவனத்தின், ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இரண்டு டோஸ்கள் செலுத்தியோருக்கு, ஒன்பது மாத இடைவெளிக்குப் பின், பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.முதற்கட்டமாக, மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி துவங்கியது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:மக்களுக்கு இதுவரையிலும், 185.74 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 12 முதல் 14 வயது வரையிலான, 2.22 கோடி சிறாருக்கு, தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. முதல் நாளே, 9,674 பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement