சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இளநிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் முதல்வர் ஸ்டாலின் கோரினார். தொடர்ந்து அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். அப்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நாடு முழுவதும் மத்திய அரசின்கீழ் 49 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகிறது. அதில் ஒரேயொரு பல்கலைக்கழகம் முதல்வரின் ஊரான திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு 27 துறைகள் உள்ள அந்த பல்கலைக்கழகத்தில் 2,515 மாணவர்கள் சேர்க்கையில் உள்ளனர். அதற்கான நுழைவுத் தேர்வெல்லாம் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது.
கேரள மாநிலம் காசர்கோடில் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. கம்யூனிஸ்ட் ஆளுகின்ற அந்த மாநிலத்தில் இதுவரை அந்த பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இருந்தாலும், முதல்வர் இன்று கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் கடைசியிலேயே தெளிவாக இருக்கிறது, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் இந்த நுழைவுத் தேர்வை சேர்த்துக் கொள்ளலாம் என உள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “சட்டப்பேரவை உறுப்பினருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. நீட் வரும்போதும் இப்படித்தான் சொன்னார்கள். தமிழகம் விரும்பினால் கொண்டு வரலாம் என்று சொன்னார்கள். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நீட் தமிழகத்துக்குள் வருவதை தடுத்துக் கொண்டிருந்தார். இப்போது நீங்கள் இப்படித்தான் ஆரம்பிப்பீர்கள், விரும்பினால் என்று ஆரம்பித்து, பிறகு புதிய கல்விக் கொள்கை அப்படியென்று கூறி கட்டாயமாக்குவீர்கள்.
எனவேதான் தமிழக முதல்வர் மிக தெளிவாக இந்த துறையின் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். அனைத்து மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்ற உணர்வோடு அவர் உருவாக்கியிருக்கிறார். இது கேரளா மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கிற, பாஜக இருக்கிற மாநிலங்களைத் தவிர, ஆரம்பத்தில் 9 மத்தியப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்று வந்த இந்த தேர்வு, தற்போது 54 பல்கலைக் கழகங்களில் நடத்தப்படுகிறது. எனவே, சட்டப்பேரவை உறுப்பினர் கூறுவது தவறான கருத்து, மத்திய அரசு மீண்டும் இந்த நுழைவுத் தேர்வை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அதை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையோடு, தமிழக முதல்வர் உயர் கல்வித் துறையின் மூலமாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு இல்லாமல், இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அப்போது பேரவைத் தலைவர் அப்பாவு, “தமிழகத்திற்கு இந்த நுழைவுத் தேர்வு தேவை இல்லை என்பது நமது உறுப்பினருக்கும் தெரியும்” என்று கூறினார். இதற்கு பதிலளித்த சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் ஐஐடி சென்னையில் உள்ளது, ஐஐஎம், என்ஐடி திருச்சியில் உள்ளது, இங்கு பி.டெக், எம்.டெக் உள்ளிட்ட எந்த படிப்புகளை படித்தாலும், அவர்கள் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். இது 30, 40 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. நமது மாநில பல்கலைக்கழகங்களில் இதுவரை அதுதொடர்பான நீட்டிப்பு இல்லை. எனவே தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கூறி சட்டப்பேரைவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.