மங்களூரு : காலாவதியான மருந்துகள், மருத்துவ கழிவுகளை அறிவியல் முறைப்படி அழிக்க வேண்டுமென்ற விதிமுறை இருந்தும், மங்களூரின் சந்துார் அருகில், தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மருந்து பாக்கெட்கள் வீசப்பட்டுள்ளன.தட்சிண கன்னடா மங்களூரு நகரின், சந்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மரங்கள், செடிகள், புதர்கள் நிறைந்த பகுதிகள் உள்ளன. இங்கு பெருமளவில் மருந்து பாக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் மருந்துகள் பாக்கெட்டுகள், ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளும் வீசப்பட்டுள்ளன.பீர் பாட்டில்தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடம், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. குப்பை, பீர் பாட்டில்கள் மலை போன்று குவிந்து கிடக்கிறது.இதை கட்டுப்படுத்துவதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறை காண்பிக்கவில்லை. கோளூர் முதல் சந்துார் வரை, நெடுஞ்சாலை நெடுகிலும், இது போன்று கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன.அபாயமான கழிவுகளை கொட்டுவதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.தட்சிண கன்னடா உதவி மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரி சங்கர் நாக் கூறியதாவது:காலாவதியான, பயன்படுத்த முடியாத மருந்து பாட்டில்கள், பாக்கெட்டுகளை சாலை ஓரம் வீசக்கூடாது. இத்தகைய மருந்துகளை அழிக்க, விசேஷ முறை உள்ளது.சில மருந்து நிறுவனங்கள், காலாவதியாகும் மூன்று மாதங்களுக்கு முன்பே, மருந்துகளை திரும்ப பெற்றுக்கொள்கின்றன. பயோ மெடிக்கல் முறைப்படி, மருந்துகள் அழிக்கப்படுகின்றன. விதிமுறைப்படி மருந்துகளை அழிக்க வேண்டுமே தவிர சாலையில் வீசுவது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement