பயனர்களுக்கு தெரியாமல் போன்களில் இருந்த போன் எண்கள் உட்பட பல தகவல்களை ரகசியமாக திரட்டி வந்த 10 செயலிகளுக்கு பிளே ஸ்டோரில் தடை விதித்துள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் நிறுவனம் அவ்வப்போது அத்துமீறி செயல்படும் செயலிகளுக்கு பிளே ஸ்டோரில் தடைவிதிப்பது வழக்கம். கடந்த காலங்களில் அது போல எண்ணற்ற செயலிகளுக்கு கூகுள் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் மேலும் பத்து செயலிகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச செய்தி வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள செயலிகளுக்கு பலவிதமான பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளும். அதன் பிறகே தங்கள் தளத்தில் அந்த செயலிகளை பயனர்கள் டவுன்லோடு செய்ய அனுமதிக்கும். இருந்தாலும் சமயங்களில் அபாயகரமான செயலிகள் பிளே ஸ்டோரில் ஆக்கிரமிப்பது உண்டு. அதனை அடையாளம் கண்டு கூகுள் களையெடுக்கும். அப்படித்தான் இந்த முறையும் செய்துள்ளது.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள பத்து செயலிகள் இருப்பிடம், மின்னஞ்சல், தொலைபேசி எண்கள், அருகில் உள்ள சாதனங்கள் மற்றும் பாஸ்வேர்டு மாதிரியானவற்றை பயனர்களுக்கு தெரியாமல் சேகரித்து வந்துள்ளது. அது தொடர்பான தகவல்கள் கூகுளுக்கு தெரியவர நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ஸ்பீட் ரேடார் கேமரா, அல்-மொஜின் லைட் (பிரேயர் டைம்ஸ்), வைஃபை மவுஸ் (ரிமோட் கண்ட்ரோல் பிசி), க்யூ ஆர் மற்றும் பார்கோடு ஸ்கேனர் (ஆப் சோர்ஸ் ஹப் மூலம் உருவாக்கப்பட்டது), கிப்லா காம்பஸ் – ரமலான் 2022, சிம்பிள் வெதர் மற்றும் கிளாக் விட்ஜெட் (டிஃபரால் உருவாக்கப்பட்டது), ஹேண்ட்சென்ட் நெக்ஸ்ட் எஸ்எம்எஸ் – எம்எம்எஸ் உடன் உரை, ஸ்மார்ட் கிட் 360, ஃபுள் குர்ஆன் எம்பி3-50 மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆடியோ, ஆடியோ ஸ்ராய்ட் ஆடியோ ஸ்டுடியோ DAW ஆகிய பத்து செயலிகளுக்கு கூகுள் தடை செய்துள்ளது. இந்த செயலிகளை சுமார் 60 மில்லியன் பேர் இதுவரையில் டவுன்லோடு செய்துள்ளனர். இந்த செயலிகள் பயனர்களின் போனில் இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.