சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எழிலரசன், பிச்சாண்டி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம் எம்.சி.சாலை குறுகலாக உள்ளதால், அதற்கு அருகே உள்ள ராபின்சன் பூங்கா அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கேற்ப, தமிழ்நாடு முழுவதுமே பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நகராட்சித்துறையின் இடம் ஏதும் இருப்பின் அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், காஞ்சிபுரத்திலும் இடம் கிடைப்பதைப் பொறுத்து பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், சென்னையின் தி.நகரில் அமைக்கப்பட்டது போல் இல்லாமல், இனி இரும்பு பீம் கொண்டு குறைந்த செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் கட்டப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.