இஸ்லாமாபாத்-பாகிஸ்தானின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரரும், பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், 70, தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று பதவியேற்றார்.
இதன் வாயிலாக ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த நடவடிக்கைகளால், அந்த நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
அந்நாட்டின் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில், இம்ரான் கான் அரசு ஆட்சியை இழந்தது.இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு, அந்நாட்டு பார்லி.,யில் நேற்று மதியம் நடந்தது. பிரதமர் பதவிக்கு போட்டியிட, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப், வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர். இவருக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தன.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி சார்பில், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, வேட்பு மனு தாக்கல் செய்தார்.ஆனால், ஓட்டெடுப்புக்கு முன், தங்கள் கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்வதாக குரேஷி அறிவித்தார்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக கூறிய அவர், கட்சி எம்.பி.,க்களுடன் இணைந்து வெளிநடப்பு செய்தார்.இதையடுத்து, 174 பேரின் ஆதரவுடன், நாட்டின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் மிகப் பெரிய மாகாணமான பஞ்சாபின் முதல்வராக மூன்று முறை இருந்தவர் ஷெபாஸ். நீண்ட நிர்வாக அனுபவம் உள்ளவர்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பார்லிமென்டில் அவர் பேசியதாவது:நம் நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்று உள்ளது. மோசமான ஒன்றை நல்லது வென்றுள்ளது.இந்நாளை, நம் நாட்டின் ‘வரலாற்று சிறப்புமிக்க நாள்’ என குறிப்பிட வேண்டும்.இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வெளிநாட்டு சதியின் பின்னணியில் நாங்கள் தாக்கல் செய்ததாக, முந்தைய அரசு கூறியுள்ளது.
அதில் எந்த உண்மையும் இல்லை. இது தொடர்பாக, பார்லிமென்டின் பாதுகாப்பு குழு விசாரிக்கும்.அதில் நாங்கள் சதி செய்தது உறுதியானால், உடனடியாக பதவியில் இருந்து விலகுவேன். இந்த நேரத்தில் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையேயான நட்புறவு தொடரும். அந்த உறவு கட்டுக்கோப்பாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிலையில், பாக்., பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நேற்றிரவு பதவியேற்றார். அவருக்கு, நம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்
.
சீனா நம்பிக்கை
பாகிஸ்தானில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியுள்ளதாவது:பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து கவனித்து வருகிறோம். அந்நாட்டின் வளர்ச்சிக்கு, கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம். அங்கு எந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும், அந்நாட்டுடனான எங்களுடைய நட்புறவு தொடர்ந்து வலுவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாடு செல்ல தடை
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ., வெளிநாடுகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டோர் பட்டியலை திருத்தி வெளியிட்டுள்ளது. இதில், இம்ரான் கானுக்கு நெருக்கமாக இருந்த, ஆறு உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இம்ரான் கானின் முன்னாள் முதன்மை செயலர் அசம் கான், கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் அர்சலான் காலித் உள்ளிட்டோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன
.
குழப்பத்தால் சிரிப்பலை
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தற்போது ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ளார். தேர்தல் வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பால், அவர் கட்சித் தலைவராக தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து, அவருடைய சகோதரரான ஷெபாஸ் ஷெரீப் கட்சியின் தலைவரானார்.
பார்லிமென்டில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நேற்று நடந்தது. இதை, ஷெபாஸ் ஷெரீப் கட்சியைச் சேர்ந்த அயாஸ் சித்திகி, சபாநாயகராக இருந்து நடத்தினார்.அப்போது, பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பெயரை அறிவிக்கும்போது, ஷெபாஸ் ஷெரீபுக்கு பதிலாக, நவாஸ் ஷெரீப் என்று அவர் அறிவித்தார். தவறை உணர்ந்த அவர் அதை திருத்திக் கொண்டார். இதனால், அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.