இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுப்பதவிக்காலமும் ஆட்சி அதிகாரம் செலுத்தியது இல்லை என்ற வரலாறுக்கு இம்ரான்கானும் விதிவிலக்கு இல்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு
அங்கு இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. ஆனாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஓட்டெடுப்புக்கு விடுவதில் பெரும் இழுபறி நிலவியது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கைசர் இணங்கி நடக்கவில்லை. ஒரே நாளில் சபை பல ஒத்திவைப்புகளை சந்தித்தது. நள்ளிரவுவாக்கில், “இம்ரான்கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அன்னிய சக்தியின் சதியில் ஒரு அங்கமாக நான் இருக்க விரும்பவில்லை” என்று கூறி சபாநாயகர் ஆசாத் கைசர் பதவி விலகினார். அவரது வழியில் துணை சபாநாயகர் காசிம் சூரியும் பதவி விலகினார்.
இப்படி அடுத்தடுத்து நடந்த திருப்பங்களைத் தொடர்ந்து, அடுத்த திருப்பமாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக், சபைக்கு தலைமை வகித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தினார்.
அரசு கவிழ்ந்தது
இதில் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவரது அரசு கவிழ்ந்தது.
பாகிஸ்தான் வரலாற்றில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான்கான் தட்டிச் செல்கிறார்.
புதிய பிரதமர் தேர்தல் அறிவிப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தற்காலிக சபாநாயகராக இருந்து சபையை வழிநடத்திய அயாஸ் சாதிக் அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்தன.
அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுவோர் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதியம் 2 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும், 3 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும், திங்கட்கிழமை (இன்று) நாடாளுமன்றம் கூடி, புதிய பிரதமரை தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அது மதியம் 2 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டது.
நவாஸ் ஷெரீப் தம்பி வேட்பு மனு
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70), நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் அதன் துணைத்தலைவர் ஷா மக்மூத் குரேஷி வேட்பு மனுதாக்கல் செய்தார். இருவரது வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
‘புதிய சகாப்தம் தொடங்குவோம்’
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் பேசிய ஷபாஸ் ஷெரீப் கூறியதாவது:-
தேசிய நல்லிணக்கம்தான் எனது முதன்மையாக இருக்கும். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்திய பிறகு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். எதிர்க்கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து புதிய மந்திரிசபை அமைக்கப்படும். ஒரு புதிய சகாப்தம் தொடங்குவோம். பரஸ்பர மரியாதைக்குரிய கலாசாரத்தை நாட்டில் வளர்ப்போம்.
இந்தியாவுடன் அமைதியை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல், அது சாத்தியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று புதிய பிரதமர் தேர்வு
எனவே இன்று பிற்பகலில் கூடுகிற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷபாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில், இம்ரான்கான் கட்சி எம்.பி.க் கள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக அதன் மூத்த தலைவரும், முன்னாள் தகவல் துறை மந்திரியுமான பவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.
இம்ரான்கான் வெளிநாடு செல்ல தடையா?
இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தும் என தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல் காலித் ஜாவத் கான் பதவி விலகி உள்ளார்.
இம்ரான்கான் மற்றும் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தோர் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கலாகி உள்ளது. அதன் மீது இன்று விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை முடிவில் இம்ரான்கான் வெளிநாடு செல்ல தடை வருமா என்பது தெரிய வரும்.
எந்தவொரு அரசு அதிகாரியும், தடையில்லா சான்றிதழ் இன்றி வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவுடன் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு முகமை எப்.ஐ.ஏ. உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஏ. மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.