புதுடெல்லி: அமெரிக்க அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் இருந்து பிரதமர் மோடி உடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். இந்தியா, அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை சந்தித்து வெளியுறவு கொள்கை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு, இந்தியா, அமெரிக்கா இடையே நடக்கும் முதல் 2+2 மாநாடு இதுவாகும். எனவே, இதனையொட்டி வெள்ளை மாளிகையில் இருந்து பிரதமர் மோடியுடன் அதிபர் பைடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியுடன் அதிபர் பைடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். அப்போது, ‘ பயங்கரமான தாக்குதலினால் உக்ரைன் மக்கள் நிலை குலைந்திருந்த நேரத்தில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவியதை பாராட்டுகிறேன். ரஷ்ய போரை தடுத்து நிறுத்த இப்பிரச்சனையை எப்படி கையாளுவது, என்ன மாதிரியான நிலையான முயற்சி மேற்கொள்வது என்பது குறித்து அமெரிக்கா, இந்தியா ஆலோசனை நடத்தும்,’’ என்று அதிபர் பைடன் கூறினார்.பிரதமர் மோடி பேசுகையில், ‘இந்தியா, அமெரிக்கா உலகின் மிக பழமையான ஜனநாயக நாடுகளாக இருப்பதால் இந்த நட்புறவு இயற்கையாகவே அமைந்து விட்டது. உக்ரைனில் நிலைமை கவலையளிப்பதாக உள்ள சூழலில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. அண்மையில் புச்சாவில் நடந்த படுகொலைகள் மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கு இந்தியா உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியது. இந்தியா, அமெரிக்கா இடையிலான இந்த பேச்சுவார்த்தையின் மூலம் உக்ரைனில் அமைதி திரும்ப வழி கிடைக்கட்டும். புடினிடம் உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டு கொண்டேன்,’’ என்று தெரிவித்தார். * அமெரிக்க விண்வெளி நிறுவனங்களுக்கு அழைப்புஅமெரிக்காவின் விண்வெளி பாதுகாப்பு நிறுவனங்கள் போயிங் மற்றும் ரேதியான் நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளை அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது, இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மேக் பார் தி வேர்ல்டு உலகத்துக்காக தயாரிப்போம் என்பதை நோக்கி முன்னெடுத்து செல்வதற்காக இந்தியாவின் கொள்கை முயற்சிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.