ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரோனின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து அந்நாட்டுக்கான 12ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை என்றால், இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். முதல் சுற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் சுற்றில், குடிமக்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்கு செலுத்தலாம், ஆனால், இரண்டாவது சுற்றில் இரண்டு வேட்பாளர்களில் ஒருவருக்கு மட்டும்தான் வாக்களிக்க முடியும். அந்நாட்டின் தேர்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் முதல் சுற்று வாக்கெடுப்பின் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அதன்படி, முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு வருகிற 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான
இமானுவேல் மேக்ரோன்
வலதுசாரி வேட்பாளரான
மரின் லி பென்
ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் பல விதமான கருத்துகள், பார்வைகளுடன் வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். நேட்டோ ராணுவக் கூட்டணியைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியம் தனது மூலோபாய மற்றும் பாதுகாப்பு கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்தை இமானுவேல் மேக்ரோன் முன்வைத்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்று, நாட்டின் தனித்துவ அடையாளத்தையும் உரிமையையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மரின் லி பென் எடுத்துள்ளார்.
‘சுதந்திர போராட்டம் மீண்டும் தொடங்குகிறது!’ – இம்ரான் கான் அதிரடி!
இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தற்போது பிரெஞ்ச் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்களும் வாக்களித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, முதல் சுற்றில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன, தற்போதைய நிலவரப்படி, 97 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இமானுவேல் மேக்ரோன் 27.35 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். மரின் லி பென் 23.97 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். ஜீன்-லூக் மெலன்சோன் 21.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், இவர்கள் மூன்று பேர் மட்டுமே 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர்.