வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்-ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் பதவிக்கான முதல் கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதிபர் இமானுவேல் மேக்ரான், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரின் லீ பென் முன்னிலையில் உள்ளனர்.
பிரான்சில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்து வருகிறது. இந்நாட்டு சட்டங்களின்படி, முதல் கட்டத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் நடத்தப்படும்.இதன்படி, முதல் கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதில், எல்.ஆர்.இ.எம்., எனப்படும், லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளராக, மீண்டும் போட்டியிட்டுள்ள இமானுவேல் மேக்ரான், 27.60 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான ஆர்.என்., எனப்படும், நேஷனல் ரேலி கட்சியின் மரின் லீ பென், 23.41 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளார். இவர்களைத் தவிர, மேலும் 10 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். தற்போதைக்கு பெரும்பான்மை கிடைக்காததால், வரும் 24ம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்க உள்ளது. இதில், மேக்ரான், பென் இடையே நேரடி மோதல் இருக்கும்.இதற்கிடையே, அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களின் ஆதரவைப் பெற, இருவரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தற்போது, 44 வயதாகும் மேக்ரான், தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராகும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். பிரான்சில், 2002க்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில், யாரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை நோக்கி, 53 வயதாகும் பென் களத்தில் தீவிரமாக உள்ளார்.
Advertisement