பிளட் பிரஷர் தெரியும்; ஐ பிரஷர் தெரியுமா? – கண்கள் பத்திரம் – 10

ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் பிளட் பிரஷர் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா? அதன் பெயர் `க்ளாக்கோமா’ (Glaucoma). அது என்ன செய்யும்… அறிகுறிகள் எப்படியிருக்கும்…. சிகிச்சைகள் தேவையா…? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

சிறப்பு மருத்துவர் வசுமதி

அதென்ன க்ளாக்கோமா?

கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா. கண்ணின் முன்பகுதிக்குள் ஆக்குவஸ் ஹியூமர் (Aqueous humour) என்ற திரவம் சுற்றி வரும். இது அளவுக்கதிகமாக உற்பத்தியானாலோ அல்லது வெளியேறாமல் இருந்தாலோ கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு க்ளாக்கோமா பிரச்னை ஏற்படும்.

அறிகுறிகள்:

– பார்வையில் தடுமாற்றம், அடிக்கடி கண்ணாடி பவர் மாறுவது.

– பக்கவாட்டுப் பார்வை பாதிக்கப்படுவது.

– கலர்கலர் வளையங்கள் தெரிவது போன்று உணர்வது.

– கடைசியாக குழாயின்வழியே பார்ப்பது போன்ற உணர்வு.

கண்களில் ஏற்படும் இந்த அழுத்தம் எந்த வயதினருக்கும் வரலாம். பிறந்த குழந்தைக்கு வரும் கண் அழுத்தத்தை Congenital Glaucoma என்கிறோம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைக்கு முதலில் கண்கள் அழகாக இருக்கும். பிறகு கண்கள் பெரிதாகிக் கொண்டேபோய், ஒரு கட்டத்தில் ரொம்பவும் பெரிதாகிவிடும். கருவிழிகள் நீலநிறமாகி, பிறகு வெள்ளையாக மாறிவிடும். கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் குழந்தையின் கண்கள் பெரிதாக இருப்பதாக நினைத்து அதை ரசிப்பார்கள். ஒரு கட்டத்தில் அது மிகவும் பெரிதாகிவிடும். அந்த நிலையில் சிகிச்சையும் பலனளிக்காது.

இந்தக் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தெல்லாம் பலனளிக்காது. அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும். டிரபிகுலாடமி மற்றும் டிரபிகுலெக்டமி (Trabeculotomy & Trabeculectomy) என இரண்டு அறுவைசிகிச்சைகளைச் சேர்த்துச் செய்ய வேண்டும். மயக்க மருந்து கொடுத்துச் செய்ய வேண்டிய சிகிச்சை இது.

சில குழந்தைகளுக்கு முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் சிவந்து காணப்படும். அந்த மாதிரி குழந்தைகளுக்கு அந்தப் பக்க கண்ணில் பிரஷர் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இதை `ஸ்டர்ஜ்-வெபர் சிண்ட்ரோம் (Sturge-Weber Syndrome (SWS) என்று சொல்வோம்.

விடலைப்பருவத்தினரை பாதிக்கும் கண் அழுத்த பாதிப்பும் இருக்கிறது. அதற்கு `ஜுவனைல் க்ளாக்கோமா’ (Juvenile Glaucoma) என்று பெயர். ஆர்த்ரைட்டிஸ் பாதிப்புள்ள குழந்தைகள், ஸ்டீராய்டு மருந்துகள் நிறைய சாப்பிட்டார்கள் என்றால் அவர்களுக்கும் கண்களில் பிரஷர் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அந்த வகை கண் அழுத்தத்துக்கு ‘செகண்டரி க்ளாக்கோமா’ (Secondary Glaucoma ) என்று பெயர். அதாவது `பிரைமரி க்ளாக்கோமா’ (Primary Glaucoma) என்பது தானாக வருவது. `செகண்டரி க்ளாக்கோமா’ என்பது நாம் உட்கொள்ளும் மருந்துகளின் விளைவால் வருவது.

Kid’s Eye (Representational Image)

பெரியவர்களுக்கு வரும் க்ளாக்கோமாவில் `ஓப்பன் ஆங்கிள்’, `குளோஸ்டு ஆங்கிள்’ என இரண்டு வகை உண்டு. ஆங்கிள் என்கிற அமைப்புதான் நம் கண்களில் உள்ள விழித்திரவம் வெளியேற வழி. இந்த இரண்டு வகை க்ளாக்கோமா பாதிப்புகளையும் `கோனியோஸ்கோபி’ (Gonioscopy) என்ற டெஸ்ட்டின் மூலம் கண்டுபிடிக்க முடியும். `குளோஸ்டு ஆங்கிள்’ க்ளாக்கோமா பாதிப்புக்கு லேசர் சிகிச்சையின் மூலம் அந்த ஆங்கிளை திறந்துவிடுவோம்.

க்ளாக்கோமா என்பது வழக்கமாக பக்கவாட்டுப் பார்வையை பாதிக்கும். மையப் பார்வை நன்றாக இருக்கும். அதைவைத்து மக்கள் தங்களுக்கு பார்வை நன்றாகத்தானே இருக்கிறது என நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு பக்கவாட்டு பார்வையில் பிரச்னை இருக்கலாம். இதற்கு கண்களைத் தொடாமல் செய்யக்கூடிய ஓசிடி எனப்படும் ‘ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி’ ( Optical Coherence Tomography (OCT) பரிசோதனை மூலம் லேசர் கதிர்களை உள்செலுத்தி மற்றொரு டெஸ்ட்டும் செய்யப்படும். மருத்துவர் குறிப்பிடும் சில டெஸ்ட்டுகளை 6 மாதங்களுக்கொரு முறை செய்து பார்க்க வேண்டும். அது தவிர கருவிழியின் தடிமனைப் பரிசோதிக்கும் பாக்கிமெட்ரி (Pachymetry) டெஸ்ட்டும் அவசியம்.

இது தவிர்த்து க்ளாக்கோமா பாதிப்பு உள்ளோருக்கு கண்ணை மூளையோடு சேர்க்கும் ஆப்டிக் டிஸ்க் பகுதி பெரிதாகிக்கொண்டே போகும். அதை ஃபண்டஸ் போட்டோகிராபி (Fundus photography) பரிசோதனை செய்து சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

பெரியவர்களுக்கு வரும் ஆரம்பநிலை கண் அழுத்த பாதிப்புக்கு இன்று தரமான சொட்டு மருந்துகள் வந்துள்ளன. அவற்றை உபயோகித்தாலே தீர்வு கிடைக்கும். அப்படிக் கட்டுப்படுத்த முடியாதபோது Cyclo G6 எனப்படும் நவீன லேசர் மூலம் தீர்வு காணலாம். இதில் வலி இருக்காது. முன்பெல்லாம் கண் அழுத்த பாதிப்புக்குச் செய்யப்பட்ட லேசர் சிகிச்சையில் கண்களின் ஆற்றல் சற்று குறையும். ஆனால் இந்த நவீன லேசரில் அந்தப் பிரச்னை இல்லை. இந்தச் சிகிச்சையில் கண்களுக்கு மசாஜ் செய்யப்பட்டு விழித்திரவம் எளிதாக வெளியேறும். மேற்குறிப்பிட்ட அனைத்து சிகிச்சைகளும் பலனளிக்காத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

Eyes

சில நேரங்களில் கண்களில் ரத்தக் கசிவு அதிகமாகி பெரியவர்களுக்கு செகண்டரி க்ளாக்கோமா வரலாம். கண்களின் முன், பின் பக்கங்கள் இரண்டிலும் ப்ளீடிங் அதிகமிருக்கும். அதற்கு `நியோவாஸ்குலர் க்ளாக்கோமா’ (Neovascular Glaucoma ) என்று பெயர். அதற்கும் லேசர் உள்ளிட்ட பல சிகிச்சைகள் உள்ளன.

க்ளாக்கோமா பாதிப்பைப் பொருத்தவரை வருமுன் காப்பதுதான் சரியான தீர்வு. 40 வயதைக் கடந்தவர்கள் கண்ணாடிக் கடையில் போய் கண்ணாடி வாங்கி மாட்டிக்கொண்டால் போதும் என நினைக்கிறார்கள். அப்படியில்லாமல் வருடம் ஒருமுறை கண்களைப் பரிசோதித்து வேறு ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் ஆரம்பநிலையிலேயே தெரிந்து சரிபடுத்திக்கொள்வதுதான் சிறந்தது.

– பார்ப்போம்

– ராஜலட்சுமி

வாசகர் கேள்வி: “வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது அவசியமா?”

– பி. மாலதி, சென்னை

வெயிலில் செல்லும்போது சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, குடை எடுத்துச் செல்வது போன்று சன் கிளாஸ் அணிவதும் அவசியம். சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் கண்களையும் பாதிக்கும். எனவே, வெயிலில் செல்லும்போது அல்ட்ரா வயலட் ஏ மற்றும் பி கதிர்களைத் தடுக்கும் தரமான குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்வது மிக அவசியம். வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு குறிப்பிட்ட சில வேலைகளின் போதும், விளையாடும்போதும் கண்களுக்குப் பாதுகாப்பு முக்கியம். மணற்பாங்கான திடல்களில் விளையாடும்போதும், தோட்டவேலை செய்யும்போதும், பயணத்தின் போதும் கண்ணாடி அணிவது பாதுகாப்பானது.

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.