சென்னை: இந்தியா மற்றும் இலங்கையில் நிலவும்தற்போதைய அரசியல் சூழல், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, திமுக ஆட்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த சிறப்பு பேட்டி:
தங்களது திடீர் உடல்நலக் குறைவுக்கு காரணம் என்ன?
உ டல்நலக் குறைவு இல்லை. அன்றைய தினம் நான் சாப்பிடாமல் சென்றுவிட்டேன். போகும் வழியில் இளநீர் குடிப்பேன். அதையும் செய்யத் தவறிவிட்டேன். அன்று வெயில் மிக அதிகமாக இருந்தது. நீண்டநேரம் வெயிலில் நின்றதால் உடலில் இருந்த நீர்ச்சத்து வெளியேறி மயக்கம் வந்தவிட்டது. வேறு ஒன்றும் இல்லை.
திமுக ஆட்சி பற்றி என்ன கருதுகிறீர்கள்? ஆளுங்கட்சிக்கு நீங்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறதே?
திமுக ஆட்சி பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்துஓராண்டு நிறைவு பெறப் போகிறது. எல்லாமே செய்தி அரசியல் செய்கிறார்கள். சேவை அரசியலோ, செயல் அரசியலோ கிடையாது. எதையும் நிறைவேற்றுவதில்லை. அறிவிக்கும்போது செவிக்கு இனிப்பாக இருக்கிறது. ஆனாலும், அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட இவர்கள் ஆட்சியில் கூடுதலாக கமிஷன் பெறுவது, லஞ்சம் வாங்குவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதையெல்லாம் ஒழிக்காமல் நல்லாட்சி என்று எப்படி சொல்ல முடியும்.
எங்கெல்லாம் வழக்கு இருக்கிறதோ அதையெல்லாம் தேடிப் பிடித்து எனக்கு வாரம் ஒருமுறை அழைப்பாணை (சம்மன்) அனுப்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்துக்கும் போய்வர வேண்டியுள்ளது. இந்நிலையில், எங்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறுவது கொடுமையானது.
பெட்ரோலியப் பொருட்கள் விலை தினமும் உயர்த்தப்படுகிறதே?
பெட்ரோலியப் பொருட்கள், சுங்கக் கட்டணம் போன்றவற்றின் உயர்வால் பால், அரிசி, முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அடக்க விலை அதிகரிக்கும். விலைவாசி மேலும் உயரும். குடும்பச் செலவு இரண்டு மடங்காகும். பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டது என்கிறது தமிழக அரசு. சொத்து வரியை தமிழக அரசு உயர்த்திவிட்டது என்கிறது மத்திய அரசு. இப்படி பேசிப் பேசியே எங்கே போய் இவர்கள் நிறுத்துவார்கள் என்றே தெரியவில்லை.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்தீர்களா?
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் எதிர்பார்த்ததுதான். அதேநிலைமைக்கு நாமும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவில் அந்த நிலை ஏற்படலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்குதான் கொண்டுபோய் நிறுத்தும். இலங்கையின் நிலை நமக்கு ஒரு படிப்பினைதான்.
திரைப்பட நடிகர்கள் தங்களது படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது அவர்களது உரிமை. அதுபற்றி கருத்து ஒன்றும் சொல்ல முடியாது. அரசியல் தொடர்பான காட்சிகள் வைப்பது அவர்களுடைய துணிவைப் பொருத்தது. நெருக்கடி வரும் என சிலர் பயப்படலாம். சிலர் துணிந்து கருத்துகளை சொல்லலாம். அதை அப்படித்தான் நான் பார்க்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.