வாஷிங்டன் : நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவைச் சேர்ந்த ‘போயிங்’ மற்றும் ஏவுகணை தயாரிக்கும் ‘ரேதியன்’ நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராஜ்நாத் சிங், போயிங் விமான நிறுவனம் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்கும் ரேதியன் நிறுவன உயரதிகாரிளுடன் பேச்சு நடத்தினார்.
இது குறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாஷிங்டனில், போயிங் மற்றும் ரேதியன் நிறுவன உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படும் நாடு, ‘உலகிற்காக தயாரிப்போம்’ என்ற இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வதாக ராஜ்நாத் சிங் கூறினார்.இந்த திட்டங்களால் கிடைக்கும் பயன்களை, அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும், அவர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன் ஆகியோரை சந்தித்து, பேச உள்ளனர். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியுடன் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேச உள்ளார். இதில், ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் இருவரும் கலந்து கொள்வர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு, அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, ஜோ பைடன் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Advertisement