வாணியம்பாடியில் காவல் துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த பெண் சாராய வியாபாரி உட்பட 7 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர், காமராஜர் நகர், இந்திரா நகர், லாலா ஏரி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடியாட்களை வைத்து கள்ளச்சாராயம், கஞ்சா, போலி மதுபான பாட்டில்கள், விற்பனையில் ஈடுபட்டு வந்த மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன், உறவினர்களான உஷா, தேவேந்திரன், சின்னராஜ், மோகன், மகேந்திரன், பழனி, சிரஞ்சீவி, நவீன், எலி சரவணன், செல்வி, உள்ளிட்ட மேலும் பலர் சாராயம் கஞ்சா போலி மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை 100க்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பியும் பயனில்லை என்பதால் கடந்த மாதம் 6 தேதி பொதுமக்களே வெகுண்டெழுந்து சாராய விற்கும் இடத்திற்குச் சென்று சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி கொட்டகைக்கு தீவைத்து எரித்து சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி – ஆலங்காயம் சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனடியாக சாராய வியாபாரத்தை முற்றிலும் ஒழிக்க 3 தனிப்படைகளை அமைத்து தலைமறைவாக உள்ள சாராய கும்பலை பிடிக்க உத்தரவிட்டனர். இது தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தியபோது சாராய மூட்டைகளும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சாராய கும்பலை சேர்ந்த 21 பேரை கைது செய்த காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரி உள்ளிட்ட பலரை தேடி வந்தனர். இந்நிலையில் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன் உட்பட 6 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கி இருப்பதாக தனிப்பட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் அங்கு பதுங்கியிருந்த மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன், உஷா, தேவேந்திரன், சின்னராஜ், மோகன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை வாணியம்பாடி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM