பெங்களூரு, : ”மாண்டியா மாவட்டத்தின் அபிவிருத்தியே என் குறிக்கோள். மாவட்ட மக்கள் என்ன சொல்கின்றனரோ, அதன்படி நடப்பேன்,” என எம்.பி., – சுமலதா அம்பரிஷ் தெரிவித்தார்.மாண்டியா சுயேச்சை எம்.பி., -சுமலதா, முதல்வர் பசவராஜ் பொம்மையை, நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின் சுமலதா கூறியதாவது:நான் எந்த கட்சியில் சேர வேண்டுமென்பதை, நான் முடிவு செய்ய முடியாது. மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும்படி கூறியதால், நான் போட்டியிட்டேன்.என் மகன் அபிஷேக்கை தேர்தலில் களமிறக்கும்படி மக்கள் கூறுகின்றனர். தேர்தலில் போட்டியிடுவது பற்றி, அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.மாண்டியா மாவட்டத்தின் அபிவிருத்தியே என் குறிக்கோள். தற்போது நான் எந்த கட்சியில் சேர வேண்டுமானாலும் சில சிக்கல் உள்ளது. மாவட்ட மக்கள் என்ன சொல்கின்றனரோ, அதன்படி நடப்பேன்.அமைப்புகள், சமுதாய தலைவர்களின் பேச்சுக்கு ஏழைகள் பலியாகின்றனர். அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டும். கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்போர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜுவாஹிரி பேச்சு குறித்து விசாரணை நடத்துவதில் தவறேதும் இல்லை. விசாரணை நடந்தால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.மாண்டியாவில் அமைதியான சூழ்நிலை உள்ளது. சமுதாய தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். அமைதியை குலைக்கும் வகையில், யாரும் பேசக்கூடாது.வியாபாரத்துக்கு தடை விதிப்பது, ஹலால் விவாதங்களால், ஏழை மக்களின் வாழ்க்கைக்கு, பாதிப்பு ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement