கடும் மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் மண் சரிவு, பாறைகள் புரளுதல் முதலான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதனால் பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயல்படமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 8 மாவட்டங்களுக்கு நேற்று விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று பிற்பகல் 1.30 வரை இடம்பெறும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் பல தாழ் நிலப்பகுதிகளில் நீர் மூழ்கியது. குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டது.
இதேவேளை ,பலத்த காற்றின் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை மற்றும் பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, அவற்றில் வசித்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற கால நிலையினால் இன்று(11) காலைவரை 269 குடும்பங்களைச் சேர்நத 1309 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காலி – நெலுவ பகுதியில் கடும் மழையால் நீர் மட்டம் உயர்வடைந்திருந்தது. ஆற்றின் பாலத்தினை கடக்க முற்பட்ட சிறுவனொருவர் நீரில் அடித்துச் செல்லட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
தாயொருவர் அவரது 4 பிள்ளைகளுடன் இவ்வாறு பாலத்தைக் கடக்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக அநுராதபுரம் – இராஜாங்கனை நீர் தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.