சென்னை: இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக, இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றுகருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷாவை டேக் செய்து “ அரசியல் சாசனத்துக்கு எதிராகப் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம்செய்ய வேண்டும். அரசியல் சாசனத்துக்கு எதிரான கருத்துகளை, ஒரு மத்திய அமைச்சர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்தி திணிப்புக்குத் தமிழகத்தில் ஆதரவு கிடையாது” என்று பதிவிட்டுள்ளார்.