வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் : சீனாவின் ஷாங்காய் நகரில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ள மக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் பால்கனியில் இருந்து விரக்தியில் அலறும், ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில், ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, 5ம் தேதியிலிருந்து ஷாங்காய் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இதனால், ஷாங்காய் நகரின் 2.60 கோடி மக்களும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
நகரில் நேற்று முன் தினம் 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகின்றன. ‘ரோபோ’ வாயிலாக எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றன. மக்கள் வீடுகளில் தனித்தனியாக உண்ணவும், உறங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவை சேர்ந்த டாக்டர் எரிக் பெய்கில் டிங் என்பவர் தன் சமூகவலைதளத்தில், ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார்.
அதில், வானுயர நிற்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின், ‘பால்கனி’யில் இருந்து மக்கள் விரக்தியில் அலறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.கடும் கட்டுப்பாடு காரணமாக ஷாங்காய் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உச்சகட்ட மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ‘நிலைமை இப்படியே போனால் மிகப் பெரிய இழப்புகள் ஏற்படக்கூடும்’ என, அவர் எச்சரித்துள்ளார்
Advertisement