ஜார்கண்ட் மாநிலத்தின், தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலைப்பகுதியில் `ரோப்-வே’ கேபிள் கார்கள் இயக்கப்படுகிறன. இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப் கார் வே-வான திரிகுட்டில் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.
நேற்றைய தினம் ரோப் கார்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வந்தபோது, திடீரென தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு ரோப் கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த இரண்டு ரோப் கார்களில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் மருத்துவமனை சிகிச்சையின் போதும் உயிரிழந்தனர். மேலும், இதன் காரணமாக அந்த ரோப் வே-வில் இருந்த அனைத்து ரோப் கார்களில் இருந்தவர்களும் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதுவரை 2 பேர் உயிரிழந்துந்துள்ள நிலையில், 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 45 பேர் வரை சிக்கியிருக்கக் கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த விபத்து சம்பவத்துக்குப் பிறகு அங்கு பணியிலிருந்த மற்ற ஊழியர்கள் மற்றும் ரோப்கார் மேலாளர் அங்கிருந்து தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. விமானப்படை மற்றும் தேசிய மீட்புப் படைகள் இந்திய ராணுவத்தின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக தியோகர் துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி, “நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளது. ரோப்வேயில் உள்ள கேபிள் கார்களில் இன்னும் சிலர் சிக்கியுள்ளனர். மேலும், அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார்கள். அதே நேரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.