யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் கே.ஜி.எஃப். அத்தியாயம் 2 திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் 3000 காட்சிகளுக்கு மேல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “கேஜிஎஃப்”. கோலார் தங்க வயல் தொடர்பான கதைக்களத்துடன் ‘யாஷ்’ நடிப்பில் இத்திரைப்படம் வெளியானது. திரையிடப்பட்ட பல மொழிகளில் பெரு வெற்றி பெற்று வசூல் சாதனையயும் படைத்தது. வசனம் மற்றும் இசைக்காகவே தமிழிலும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. கேஜிஎஃப்க்கே உண்டான அதகளங்களுடன் 2ஆம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியானது.
ரசிகர்களின் வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது ட்ரெய்லர். கருடன் இறந்தபிறகு ஆதிராவின் பிரவேசம் தான் கதையை நகர்த்தப் போவது போல ட்ரெய்லரில் கூறப்பட்டுள்ளது. ஆதிராவாக தோன்றும் சஞ்சய்தத் பார்வையிலேயே வில்லத்தனத்தை கடத்துகிறார். “என் கேஜிஎஃப்க்காக நான் வந்துட்டு இருக்கேன்னு அவங்ககிட்ட சொல்லிடு” என்று சொல்லி புல்லரிக்க வைக்கிறது சஞ்சய் தத்தின் “ஆதிரா” கதாப்பாத்திரம். அம்மா செண்டிமெண்டை இந்த டிரெய்லரிலும் தூவியிருக்கிறார்கள். “இந்த உலகத்துல இருக்க எல்லா தங்கத்தையும் உனக்கே தரேம்மா” என்று குட்டி ராக்கி சொல்லும் வசனமும் கவனம் பெற்றது.
ராக்கியின் “I don’t like violence. I avoid it. But Violence likes me. SO I can’t avoid” என்ற ஆங்கில வசனம் கவனம் பெறுகிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை விரைவில் பூர்த்திசெய்ய ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது கேஜிஎஃப்-2. கர்நாடகாவில் இப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. கர்நாடகாவில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை.
முன்பதிவு கணக்குகளை வைத்து பல விநியோகஸ்தர்கள் படத்தின் வசூலையும் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் முதல் நாளில் மட்டும் கேஜிஎஃப் – 2 ரூ.90 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் கர்நாடகாவில் மட்டும் ரூ. 30 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் கூறுகிறார்கள். கர்நாடகாவில் அதிக திரைகளில் வெளியான திரைப்படமான மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் “ஜேம்ஸ்” இருந்து வருகிறது. ஆனால் இந்த சாதனையை கேஜிஎஃப் -2 முறியடிக்கும் என தெரிகிறது.
பெங்களூரூவில் மட்டும் முதல் நாளில் 1500 காட்சிகளை படம் காணும் என்றும் கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் 3000 காட்சிகளை காணும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரெ நாளில் 5 முதல் 6 காட்சிகளை திரையிட பல திரையரங்குகள், மல்ட்டிப்ளக்ஸ்கள் திட்டமிட்டுள்ளதால் நிச்சயம் 3000 காட்சிகள் என்ற வரலாற்று சாதனையை கே.ஜி.எஃப் 2 படைக்கும் என்றே கூறுகிறார்கள்.
திரைப்படத்திற்கான டிக்கெட் விலையும் 3 மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரூவில் உள்ள திரையரங்குகளில் ரூ.100 மதிப்புள்ள டிக்கெட் ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகாவின் பல திரையரங்குகளிலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. படம் வெளியாகும் தினம் அரசு விடுமுறை என்பதால் ஏராளாமானோர் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்ததைக் கருத்தில் கொண்டு பல திரையரங்கு உரிமையாளர்கள் பாதுகாப்புக்காக போலீஸாரை அணுக முடிவு செய்துள்ளனர்.