அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என சசிகலா கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இதனிடையே பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரியும், அதில் தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரியும் சசிகலா சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கொண்டாடும் விதமாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக நாமக்கல்லில் சசிகலா பேட்டியளித்தார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என சசிகலா கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM