புதுடெல்லி: உபி முதல்வர் அலுவலகம், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டிவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் நேற்று முன்தினம் முடக்கினர். இதைத் தொடர்ந்து, பல்கலைக் கழக மானிய குழுவின் (யுஜிசி) அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கும் ஹேக்கர்களால் நேற்று முடக்கப்பட்டது. இது, கடந்த 2 நாட்களில் ஹேக்கர்களால் முடக்கப்பட்ட 3வது அரசு இணையதளமாகும்.யுஜிசி டிவிட்டர் கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்து, சம்பந்தம் இல்லாத பல்வேறு அச்சுறுத்தல்களை பதிவிட்டுள்ளனர். அவற்றை உலகம் முழுவதிலும் உள்ள பலருக்கு டேக் செய்துள்ளனர். மேலும், கார்ட்டூன் படத்தை புரொபைல் படமாகவும் ஹேக்கர்கள் மாற்றி உள்ளனர். தற்போது, யுஜிசி டிவிட்டர் கணக்கை 2,96,000 பேர் பின்தொடர்கின்றனர். இந்த டிவிட்டர் கணக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.