லக்னோ: பாஜகவுக்கு பயந்துதான் காங் கிரஸுடன் மாயாவதி கூட்டணி அமைக்கவில்லை என்று ராகுல் காந்தியின் குற்றச் சாட்டுக்கு மாயாவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டது. கூட்டணி வெற்றி பெற்றால் மாயாவதியே முதல்வராகலாம் என்றும் தெரிவித்தோம். ஆனால், சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் பாயும் என்பதால் பாஜகவுக்கு பயந்து காங்கிரஸுடன் மாயாவதி கூட்டணி அமைக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.
ராகுலின் இந்தப் பேச்சுக்கு மாயாவதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாயாவதி வெளியிட்ட அறிக்கை யில், ‘‘பாஜகவுக்கு பயந்து கொண்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க நான் விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியிருப்பது தவறானது. இது தலித் மக்கள் பற்றியும் பகுஜன் சமாஜ் பற்றியும் அவருடைய தாழ்வான உணர்வுகளைக் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமரை தேடி போய் கட்டிப்பிடித்து உலகம் முழுவதும் நகைப்புக்கு ஆளான கட்சியின் தலைவரைக் கொண்ட கட்சி எது என்று எல்லோருக்கும் தெரியும். பகுஜன் சமாஜ் அப்படிப்பட்ட கட்சியல்ல. காங்கிரசுக்குள்ளேயே ஆயிரம் குழப்பங்கள் உள்ளன. தேவை யில்லாமல் எங்கள் கட்சியை வம்புக்கு இழுக்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.