சொத்து வரியினை வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-23ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு சொத்து வரியினை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்தி சொத்துவரியில் 5% ஊக்கத்தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை, மண்டல அலுவலகங்கள்/வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம் (Paytm), கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியற்றின் வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள்/உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாகவும் எளிதாக செலுத்தலாம்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய சொத்து வரி வீதம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும்.
எனவே, 2022-23ம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு வரும் 15ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும். தவறும் நபர்களுக்கு 2% தண்டத் தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும்.
மறுசீராய்விற்கு பிறகான சொத்து வரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சொத்து உரிமையாளர்கள் தங்களின்
2022-23ம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான மீதமுள்ள சொத்து வரியினை செலுத்தலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமாக சொத்துவரி செலுத்தும்போது, ஏதேனும் குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படின், பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யவும், அதனடிப்படையில் தீர்வு செய்யவும் தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.