கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மீது தாக்குதல் முயற்சி செய்ததால், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் அதிமுக உறுப்பினர்களான சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தமிழக அரசின் சொத்து வரி உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டம் நடைபெறும் விக்டோரியா ஹால் முன்பு, மூவரும் மாநகராட்சியின் 100 சதவீத வரி உயர்வுக்கு எதிராக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொது சுகாதாரப்பணிகள் குறித்து பேசிய திமுக உறுப்பினர்கள் கடந்த ஆட்சி குறித்து விமர்சித்தனர். அப்போது குறுக்கிட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், “திமுக கடுமையான வரி விதிப்பால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதிகப்படியான வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்” வலியுறுத்திய போது திமுக கவுன்சிலர்கள் சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும், சில உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினரை திடீரென தள்ளி விட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM