இஸ்லாமாபாத்,-பாகிஸ்தான் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு, அந்நாட்டு பார்லி.,யில் இன்று நடக்கிறது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 3ம் தேதி, பார்லிமென்டில் இதன் மீது ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது.பெரும்பான்மை இழப்புகூட்டணிக் கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் சிலர் இம்ரான் கானுக்கு எதிராக போர்க் கொடி துாக்கினர். அதனால் பார்லிமென்டில் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார். இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்து, அந்த நாட்டு பார்லிமென்டின் துணை சபாநாயகர் காசிம் கான் சுரி உத்தரவிட்டார். அடுத்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று அந்நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி பார்லிமென்டை முடக்கி உத்தரவிட்டார்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம், ‘துணை சபாநாயகர் மற்றும் அதிபரின் உத்தரவுகள் செல்லாது’ என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. மேலும், ‘பார்லிமென்டில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது 9ம் தேதி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்’ என, தீர்ப்பில் கூறப்பட்டது.அதன்படி, நேற்று முன் தினம் நள்ளிரவு பாக்., பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடந்தது.
இதில், இம்ரான் கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து இம்ரான் கான் தலைமையிலான அரசு ஆட்சியை இழந்தது. பாக்., பிரதமராக 2018, ஆக., 18ல் இம்ரான் கான் பொறுப்பேற்றார். அவரது பதவி காலம் 2023 ஆகஸ்டில் முடிவுக்கு வருகிறது. மூன்று ஆண்டுகள், ஏழு மாதங்கள், 23 நாட்கள் பிரதமராக பதவி வகித்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்து பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்தார்.சுதந்திர போராட்டம்பாக்., அரசியல் வரலாற்றில் பிரதமர் பதவி வகித்த ஒருவர் கூட, ஐந்து ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்தது இல்லை. அத்துடன், நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த முதல் பிரதமர் என்ற பெயர் இம்ரானுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு அந்நாட்டு பார்லி.,யில் இன்று மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது.பிரதமர் பதவிக்கு போட்டியிட நவாஸ் ஷெரீப்பின் பாக்., முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர்.இம்ரான் கானின் பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி சார்பில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.இதற்கிடையே, ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால், தங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக, இம்ரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்ரான் கான் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தான், 1947ல் சுதந்திரம் அடைந்து விட்டது. இப்போது வெளிநாட்டு சதி காரணமாக மீண்டும் சுதந்திர போராட்டத்தை துவங்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.முன்னேற விரும்புகிறோம்!கடந்த கால கசப்புகளுக்கு நான் திரும்ப விரும்பவில்லை. அவற்றை மறந்து முன்னேற விரும்புகிறோம். பழிவாங்கவோ, அநீதி இழைக்கவோ மாட்டோம்; எக்காரணத்தாலும், மக்களை சிறைக்கு அனுப்ப மாட்டோம்.
சட்டமும், நீதியும் அதன் கடமையை செய்யும்.ஷெபாஸ் ஷெரீப்தலைவர்,பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சிஉயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல்நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்த இம்ரான் கான் மற்றும் அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் நாட்டைவிட்டு தப்பிவிடாமல் இருப்பதற்காக, நாட்டை விட்டு வெளியேறாமல் கட்டுப்படுத்தும் பட்டியலில் அவர்களின் பெயர்களை சேர்க்குமாறு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும், ‘வெளிநாட்டு சக்திகளின் மிரட்டல் தொடர்பான கடிதம் குறித்தும் நீதிமன்றம் விசாரணை நடத்தும்’ என, கூறப்படுகிறது.இம்ரான் கான் அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் நாட்டை விட்டு தப்ப முயன்றால் அவர்களை தடுத்து நிறுத்த அந்நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், எப்.ஐ.ஏ., எனப்படும் தேசிய விசாரணை அமைப்பினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ராணுவ தளபதியை மாற்ற முயற்சி?நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைவதற்கு முன்னதாக, வெளிநாட்டு சக்திகளின் சதி என்ற, தன் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக செயல்படும் ஒருவரை ராணுவ தளபதியாக்கி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் இம்ரான் கான் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்காக, பாக்., ராணுவ தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வாவை பதவி நீக்கம் செய்யும் முயற்சியில் இம்ரான் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.ஓட்டெடுப்புக்கு முன்னதாக இம்ரான் கான் வசித்த அரசு இல்லத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று வந்ததாகவும், அதில் இருந்து இரண்டு பேர் இறங்கி சென்று இம்ரானுடன் 45 நிமிடங்கள் பேச்சு நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள், ராணுவ தளபதி பாஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ., தலைவர் நதீம் அகமது அன்ஜும் என்றும் கூறப்படுகிறது.ஒருவேளை ராணுவ தளபதி மாற்றப்பட்டால், அதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் அனைத்து ஏற்பாடுகளையும் எதிர்க்கட்சியினர் செய்திருந்ததாக கூறப்படுகிறது.