துமகூரு : ”மொத்தம் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை பிரதிஷ்டை செய்திருப்பது, வரும் நாட்களில் கர்நாடகாவுக்கு நல்ல காலம் வருவதற்கான அடையாளம்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.துமகூரு குனிகல்லின், பிதனகரே பசவேஸ்வரா மடம் சார்பில், 161 அடி உயரமான பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை அமைக்கப்பட்டது.
ஸ்ரீராம நவமி நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வழியாக நேற்று திறந்து வைப்பதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால், பிரதமர் சார்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.பின் முதல்வர் பேசியதாவது:ஸ்ரீராமநவமியான நேற்று புனிதமான பணி நடந்துள்ளது. சில ஆண்டுகளிலேயே, இந்த புண்ணிய தலம் அபார வளர்ச்சியடைந்துள்ளது.
மடத்தின் பக்தர்களின் மனம் மிகவும் பெரியது.பஞ்சமுக ஆஞ்சனேயர் மிகவும் சிரேஷ்டமானவர். ராமாயணத்தில் ஹனுமனின் அவதாரம் மிகச் சிறந்தது. உலக நன்மைக்காக ஆஞ்சனேயர், பஞ்சமுக அவதாரம் எடுத்ததாக ஐதீகம்.கன்னட மண்ணில் 161 அடி உயரமான சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்பது, ஆஞ்சனேயரின் விருப்பம். இந்த சிலையை சிற்பி, அற்புதமாக வடித்துஉள்ளார்.பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை பிரதிஷ்டை செய்திருப்பது, வரும் நாட்களில் கர்நாடகாவுக்கு நல்ல காலம் வருவதற்கான அடையாளம்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement