புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்டுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டு 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக வேளாண் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. வேளாண் துறை வளர்ச்சிக்கு இதுபோன்ற சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானது. ஆனால் விவசாயிகளில் ஒரு பிரிவினர் 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தினர். அப்போதே மாநில அரசுகளுடன் இதுகுறித்து கலந்து ஆலோசனை நடத்தியிருக்கலாம். ஆனால் தொடர் போராட்டம் காரணமாக 3 சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இந்த சூழ்நிலையில், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்டுவதற்கு சாத்தியமான வழிமுறைகளை ஆராய வேண்டியுள்ளது. இதில் வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் வருமானத்தை இரட்டிப்பாக்குவது சாத்தியமில்லை. இம்மூன்று சட்டங்களை திரும்பப் பெற்றது மிகப்பெரும் பின்னடைவுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுமார் ஓராண்டுக்குப் பிறகு மோடி தலைமையிலான பாஜகஅரசு கடந்தாண்டு டிச.1-ம் தேதி 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
– பிடிஐ