சென்னை: தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 7,441 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டிடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான தி.வேல்முருகன், “தமிழகம் முழுவதும் எத்தனை அங்கன்வாடி மையங்கள் உள்ளன, அதில் எத்தனை மையங்கள் அரசின் சொந்த கட்டிடங்களில் செயல்படுகிறது, தனியார் இடங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களுக்கு எப்போது சொந்த கட்டிடம் கட்டித் தரப்படும். குறிப்பாக குழந்தை செல்வங்களுக்கு பாதுகாப்பான இடங்கள் வேண்டும் அவர்கள் மழலைகள். எனவே புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படுமா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. சில இடங்களில் 2 அல்லது 3 குழந்தைகள் இருக்கிற இடங்களிலிருந்து குழந்தைகள் அதிகம் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்த 54,439 இல் 7,441 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களுக்கும் சொந்த கட்டிடம் அமைப்பதற்கு ஊரக வளர்ச்சித் துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த துறையின் செயலர் மற்றும் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக சட்டப்பேரவை உறுப்பினர் நிதி, மத்திய நிதி, மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டம் மூலம் விரைவாக அங்கன்வாடி மையங்களுக்கான கட்டிடம் அமைத்திடவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தை நேய தமிழகமாக மாற்றிட வேண்டும் என எங்களுக்கு ஏற்கெனவே தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே அவரது அனுமதியுடன் இவையெல்லாம் செய்து முடிக்கப்படும்” என தெரிவித்தார்.