இந்தியாவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத அரபு, பெர்சியம் என பல மொழிகளிலிருந்து இரவல் வாங்கப்பட்ட வார்த்தைகள், மொழி உருக்களால் உருவான
இந்தி
மொழி, இந்தியாவின் 8 மாநிலங்களில் மட்டுமே அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்கு இந்த மொழியை இணைப்பு மொழியாக்குவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது எந்த வகையில் நியாயம் என்று மொழி வல்லுனர்கள் கேட்கின்றனர்.
இந்தியாவின் தேசிய மொழி இந்தி, இந்தியாவின் இணைப்பு மொழியாக வேண்டும் இந்தி என்ற கோஷங்களை மீண்டும் சிலர் கையில் எடுக்க ஆரம்பித்து விட்டனர். இந்தியாவுக்கென்று எந்த ஒரு தேசிய மொழியும் கிடையாது என்பதே அரசியல் சாசனம் கூறும் உண்மை. அதேபோல இந்தியாவுக்கு இணைப்பு மொழியாக இருப்பது
ஆங்கிலம்
மட்டுமே. அதுவும் கூட காலவரையின்றி ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்று அரசியல் சாசனமே கூறுகிறது.
இந்தி பேசுவோர் அதிகம் இருப்பதால் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும், தேசிய மொழியாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்கள் மொழி அறிவு இல்லாதவர்கள் என்று மொழியியில் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருமொழியை பலர் பேசுகிறார்கள் என்பதற்காக மட்டுமே அதை முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக கூறி விட முடியாது. அப்படிப் பார்த்தால் இந்தியாவில் ஆங்கில்தான் அதிகம் பேசப்படும் மொழியாக இருக்கும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆங்கிலம் பேசாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அதற்காக ஆங்கிலத்தை இந்தியாவின் தேசிய மொழியாக்கி விட முடியுமா.. முடியாதே. அதுபோலத்தான் இந்தியும்.
இந்தியை தாய் மொழியாகக் கொண்ட மாநிலங்கள் மொத்தமே 8தான். இந்த மாநிலங்களில் மட்டுமே இந்தி அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இருக்கிறது. இதுதவிர இந்தியின் இன்னொரு வடிவமான சட்டிஸ்கரியை, சட்டிஸ்கர் மாநிலத்தில் அலுவல் மொழியாக வைத்துள்ளனர். இதுதான் இந்தியின் நிலை. இந்தியா முழுவதும் இந்தியைப் பேசுகிறார்களே என்று சொல்லும் வாதத்திற்கும் மொழி நிபுணர்கள் பதில் வைத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் அதிகமாக “பரப்பப்பட்ட” (அதாவது தானாக பரவியதில்லை) மொழி எது என்று எடுத்துக் கொண்டால் அது இந்திதான். இந்தியின் பிற வடிவங்களான ராஜஸ்தானி, சட்டிஸ்கரி என வேறு எந்த இந்தி டயலக்ட்டுக்கும் இதுபோன்ற முக்கியத்துவத்தை மத்திய அரசு இதுவரை கொடுத்தது இல்லை. ஆனால் இந்திக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து காலம் காலமாக அதை “பரப்பி” வந்தது. கட்டாய இந்தி திணிப்பும், இந்தி, இந்தியாவின் பல மாநிலங்களில் “பரவ” முக்கிய காரணம். அதிலிருந்து தமிழ்நாடு மட்டும் தன்னைக் காத்துக் கொண்டு தப்பியதால்
தமிழ்
இன்று பத்திரமாக இருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.
அதேசமயம், இந்தியை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டு வரவேற பல மாநிலங்களில் இன்று உள்ளூர் மொழிகள் அழிந்து போய் விட்டன. அந்த இடத்தை இந்திதான் பிடித்துக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள். இப்படித்தான் இந்தி, இந்தியா முழுவதும் “பரவியது” என்றும் மொழியயல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தி இயல்பாக நாடு முழுவதும் பரவவில்லை. அதேசமயம், ஆங்கிலத்தை யாரும் பரப்பவில்லை, அதுவாகவே இந்தியா முழுவதும் பரவியது என்பது நிதர்சனம். இதனால்தான் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்க மத்திய அரசு அன்று முடிவெடுத்தது.
இந்திய ஆர்ய மொழிக் குடும்பத்திலிருந்து உதித்ததுதான் இந்தி. அதே குடும்பத்தைச் சேர்ந்ததுதான் உருது. இந்த இரு மொழிகளுமே அண்ணன் தம்பி போல. இரு மொழிகளிலும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. இரு மொழிகளுமே இந்தியப் பிறப்பு அல்ல. அரபு, பெர்சி, துருக்கிய மொழிக் குடும்பத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தவை. மொழி உருவத்துக்கு அரபு – பெர்சிய ஸ்கிரிப்ட்டைத் தத்தெடுத்துக் கொண்டது உருது. மறுபக்கம், தேவநாகரி ஸ்கிரிப்ட்டை தன்னுடையதாக்கிக் கொண்டது இந்தி.
இந்தி – உருது ஆகிய இரண்டுக்குமே பொதுவான மொழி என்றால் அது கரிபோலிதான். இது டெல்லியின் சில பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். முகலாய, பெர்சிய, ஆப்கானிஸ்தான், துருக்கிய மொழிகளின் கலவை இது. இந்த மொழியிலிருந்துதான் இந்தி, உருது ஆகிய இரண்டும் கிளைத்தெழுந்து வந்தன. முழுமையான ஒரு இந்திய மொழியாக இந்தியை சொல்ல முடியாது என்பதே உண்மை. இந்தியாவில் உதித்த மொழிதான்.. ஆனால் இந்திய மொழியிலிருந்து வந்தது அல்ல என்பதே நிதர்சனம்.
1950ம் ஆண்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இந்தி உருவானது. அதேசமயம், ஆங்கிலம் இந்தியாவின் இணைப்பு மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. காலவரையின்றி ஆங்கிலம், இந்தியாவின் இணைப்பு மொழியாக தொடரும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் சில தலைவர்கள் இந்தியை பொதுவான மொழி போல பாவிக்கத் தொடங்கினர். அவர்களுக்குள் பேசிக் கொள்ள அது உதவியாக இருந்ததால் இந்தியை பொதுவான மொழியாக பாவித்தனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா பல்வேறு மொழிகள் கொண்ட கலவையான இன, மொழி நாடாக உருவெடுத்து நின்றதால் இந்தியை பொதுவான மொழியாக மாற்ற முடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்கினர். இதுதான் நிதர்சனம். இதை மாற்றத்தான் தற்போது சிலர் முயல்கிறார்கள்.
ஆனால் எப்போதெல்லாம் இந்தியை, இணைப்பு மொழியாக்க முயற்சிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் அது தோல்வியில்தான் முடிந்துள்ளது. காரணம், செயல்பாட்டுக்கு அது சரிப்பட்டு வராது என்று உணரப்பட்டதால். ஆனா இந்தியா முழுவதும் இன்று இந்தியைத் திணித்து விட்ட நிலையில் இந்தியை இணைப்பு மொழியாக்கும் நடவடிக்கையை தற்போது சிலர் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் சொல்லும் ஒரே வாதம்.. இந்தியா முழுவதும் அதிகமாக பேசப்படும் மொழி இந்திதான் என்பது. அது பலவீனமான வாதம் என்பது அவர்களுக்கே தெரியும் என்பதும் உண்மை.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் இந்தியை அவர்களாகவே படிக்கின்றனர். விருப்பப்பட்டு படிப்பதற்கும், திணிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. விருப்பப்பட்டு படிப்பதை யாருமே, எந்த மாநிலமும், எந்தக் கட்சியும் எதிர்க்கவே இல்லை. ஆனால் கட்டாயம் நீ இதைத்தான் படிக்க வேண்டும், பேச வேண்டும் என்று கூறுவதைத்தான் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதில் தென்னிந்தியா முன்பை விட அதிகமாக ஒன்று திரண்டு வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. எனவே
இந்தி திணிப்பு
என்பது எந்த அளவுக்கு இந்திப் பிரியர்களுக்குப் பலன் கொடுக்கும் என்பது கேள்விக்குரிய ஒன்றாகும்.
இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இப்போது புதிய முயற்சியை கையில் எடுக்கிறார்கள்.. பார்க்கலாம், இது வெல்கிறதா இல்லையா என்று.