உடலின் எடை குறைப்பில் ஆரம்பித்து, கழிவுகளை வெளியேற்ற, உடலை சுறுசுறுறுப்பாக இயங்க வைக்க, சருமம், கேச ஆரோக்கியத்தை பராமரித்து ஊட்டம் தர… இப்படி பல பலன்களைத் தரக்கூடியாது டீடாக்ஸ் டிரிங்க் (Detox drink) எனப்படும் சுத்திகரிக்கும் பானம். மிக எளிதாக வீட்டிலேயே தயாரிக்கக் கூடியே இந்த டீடாக்ஸ் டிரிங்கின் தயாரிப்பு முறையை விளக்குகிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா அவர்கள்.
”10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த detox drink-ஐ அருந்தலாம். காலையில் அருந்த உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். பகலிலும் எப்போது வேண்டுமானாலும் பருகலாம். கேசத்திற்கும், சருமத்திற்கும் மிகுந்த பலனைத் தரக்கூடிய டீடாக்ஸ் பானம் தயாரிப்பதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
1. ஒரு சிறிய துண்டு இஞ்சி
2. பெரிய நெல்லிக்காயின் பெரிய துண்டு
3. எலுமிச்சை – 1
4. புதினா – சிறிதளவு
5. தேன் – சுவைக்கேற்ப
செய்முறை
– இஞ்சியை நன்கு அலசி, தோல் நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
– நெல்லிக்காய் துண்டு, புதினா இரண்டையும் நன்றாக அலசி, சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
– நறுக்கி வைத்துள்ள இஞ்சி, நெல்லிக்காய், புதினாவை ஒன்றாகச் சேர்த்து இடித்துக் கொள்ளவும். மிக்ஸியில் அரைத்தால் இவை சூடாகி தன்மை மாறலாம் என்பதால், கையால் இடித்துக்கொண்டால் சிறப்பு.
– இடித்து வைத்துள்ள இந்தக் கலவையை, சிறிது சூடாக உள்ள நீரில் சேர்த்து நன்றாகக் கலக்கி, அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து 20 நிமிடங்கள் வரை மூடி வைத்திருக்கவும்.
– 20 நிமிடங்களுக்குப் பின் சூடு குறைந்து வெதுவெதுப்பாக மாறியிருக்கும். நாம் சேர்த்த கலவையும் நன்றாக நீரில் கலந்திருக்கும்.
– பின் மறுபடியும் அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு, கலந்து, அதனுடன் தேன் 2 டீஸ்பூன் கலந்து சில நிமிடங்கள் வைத்திருக்கவும்.
– அதன் பின்னர் பருகவும்.
சுவைக்காக மட்டுமே விரும்பப்படும், உடலுக்கு ஆரோக்கியம் தராத, மேலும் கெடுதல் தரக்கூடிய பானங்களை தவிர்ப்போம். டீடாக்ஸ் டிரிங்க் கொண்டு ஆரோக்கியம், சருமம், கேசத்தை மேம்படுத்துவோம்.”