கொல்கத்தா: அசன்சோலில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவின் பேஷன் டிசைனரா? அல்லது திரிணாமுல் கட்சியின் பாலிவுட் நடிகரா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மக்களவை தொகுதி பாஜக எம்பியாக இருந்த பாபுல் சுப்ரியோ, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து அசன்சோல் மக்களவை தொகுதி காலியானது. பாஜகவில் இருந்து விலகிய பாபுல் சுப்ரியோ, முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் இன்று அசன்சோல் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பாலிவுட் நடிகரும், பாஜக முன்னாள் தலைவருமான சத்ருகன் சின்ஹா போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மேற்குவங்க மாநில எம்எல்ஏவும், பேஷன் டிசைனருமான அக்னிமித்ரா பால் களம் காண்கிறார். பீகாரை சேர்ந்த சத்ருகன் சின்ஹா மேற்குவங்கத்தில் போட்டியிடுவதால், அவர் அங்கு வெற்றிக் கொடி நாட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 1957 முதல் 1967 வரை, அசன்சோல் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கடந்த 1967 முதல் 1971 வரை சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1971 முதல் 1980 வரை சிபிஐ (எம்) கைப்பற்றியது. மீண்டும் 1989 வரை காங்கிரசின் கோட்டையாக இருந்தது. அதன்பின் 1989 முதல் 2014 வரை மீண்டும் சிபிஐ (எம்) கைப்பற்றியது. 2014, 2019 பொதுத் தேர்தலில் பாஜக ெவற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அசன்சோல் மக்களவை தொகுதியில் இதுவரை திரிணாமுல் கட்சி வெற்றிப் பெறாத நிலையில், இன்றைய வாக்குப்பதிவின் மூலம் சத்ருகன் சின்ஹா வெற்றிப் பெறுவாரா? அக்னிமித்ரா பால் வெற்றிப் பெறுவாரா? என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அசன்சோல் மற்றுமின்றி மூன்று மாநிலங்களில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் 16ம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.