பெங்களூரு, : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேலோ இந்தியா’ பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளுக்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்லாத நிலையில், மத்திய அரசின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து போட்டியை நடத்த கர்நாடக அரசு தயாராகி வருகிறது.பெங்களூரிலுள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில், இந்த விளையாட்டு போட்டிகளை அரசு நடத்துகிறது.
இது குறித்து இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாராயணகவுடா நேற்று கூறியதாவது:திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், கல்வியை தவிர்த்து, மாணவர்களின் பிற திறமைகளை வெளிக்கொணரவும் இந்த போட்டி வாய்ப்பளிக்கும்.நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக இந்த விளையாட்டு போட்டி, வரும் 24 முதல் மே 3 வரை நடக்கிறது.இதில், மல்லர் கம்பம், யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டு உட்பட 20 விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.இதில், 190 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளின் இரண்டாவது பதிப்பை ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், தேசிய அளவில் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்த இது சரியான வாய்ப்பு. வளர்ந்து வரும் வீரர்கள் தனித்துவ விளையாட்டுகளில் பங்கேற்க முடியும்.போட்டிகள் நடக்கும் இரண்டு வளாகங்களும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் அதிநவீன வசதிகளை கொண்டுள்ளன.பெங்களூரு கண்டீரவா மைதானத்தில், அதலடிக் போட்டிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை புல்வெளி, இந்த போட்டிகளின் போது தான் முதன்முறையாக பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் புதுப்பிக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் கரியப்பா மைதானத்தில், ஹாக்கி அணிகள் களமிறங்குகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement