தமிழக சட்டப்பேரவையில், சென்னை அயோத்தியா மண்டபம் தொடர்பாக, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பதிலளித்துப் பேசிய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேவையின்றி அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜகவுக்கு அறிவுரை கூறினார்.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபம், தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழக சட்டப் பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பதிலளித்து பேசிய இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “அயோத்தியா மண்டபத்தில் 2004ம் ஆண்டில் இருந்தே புகார்கள் உள்ளன. 2013-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக தெரியவந்தது. தொடர்ந்து, சிவசுப்பிரமணிய கோயில் செயல் அலுவலர், இந்த அயோத்தியா மண்டபத்தின் கோயில் தக்கராக நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், தக்கர் நியமனம் செல்லுபடியானது.
இதையடுத்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்ரீராம சமாஜத்திற்கு சென்று ஆய்வு நடத்த முற்பட்டபோது, அங்கிருந்த 50-60-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக சேர்ந்து பூட்டு போட முயன்றனர். பாஜக தலைவர் தலைமையில் அங்கு கூட்டம் கூடினார்கள். சிலர் கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
அங்கே திருமண மண்டபம், காரிய கொட்டகை ஆகியவற்றுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அங்கேதான் இந்தியாவிலேயே, ஏ.சி வசதியுடன் கூடிய காரிய கொட்டகை வசதி உள்ளது. ஒரு சதுர அடிக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கூட்டம் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும், அங்கே சிலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராமர், சீதை, அனுமன் சிலைகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அரசின் மாய பிம்பத்தை எற்படுத்தி குளிர்காய நினைத்தால், யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் அஞ்சமாட்டார்” என்று கூறினார்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அயோத்தியா மண்டபம் குறித்து கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அயோத்தியா மண்டப பிரச்னையில் அரசியலைப் புகுத்தி கட்சியை வளர்க்க நினைத்தால் அது நடக்கவே நடக்காது. தேவையின்றி அரசியல் செய்வது, எந்த வகையிலும் பாஜகவை பலப்படுத்தாது. ஏழை எளிய மக்கள் பாதிக்கக்கூடிய விஷயத்தில் பாஜக கவனம் செலுத்த வேண்டும். பாஜக தரப்பு பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்த வேன்டும். மாநிலத்திற்கு வர வேண்டிய நிதியைப் பெறுவதற்கு பாஜக உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, தேவையின்றி அரசியலைப் புகுத்தி, பாஜகவை பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“