நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தியதாகக் கூறி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேராவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், அயோத்தியா மண்டபப் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ஜ.க-வுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சாமான்யர்களை பாதிக்கும் பிரச்னைகளில் பா.ஜ.க அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசிடம் பா.ஜ.க-வினர் வலியுறுத்த வேண்டும். தமிழகத்துக்கு தேவையான நிதியைப் பெற மத்திய அரசிடம் பா.ஜ.க வலியுறுத்த வேண்டும். மாநில மக்களுக்கு எது சாதகமோ அதைப் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். இதில் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த பா.ஜ.க நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி கொள்கிறேன்” என்றார்.