இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக எம்.பி.க்களுடன் இலங்கை அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கொழும்பு, 
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், பிரதமர், அதிபர் தவிர அனைத்து அமைச்சர்களும் ஏற்கனவே பதவி விலகி இருந்தனர். இதைத்தொடர்ந்து 4 மந்திரிகளை மட்டுமே அதிபரால் நியமிக்க முடிந்தது.

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக அனைத்துக்கட்சி இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
ஆனால் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எதிர்க்கட்சிகள், இடைக்கால அரசில் பங்கேற்கமாட்டோம் என அறிவித்து உள்ளன. அதுமட்டுமின்றி, பதவி விலக மறுக்கும் அதிபருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் நாட்டில் இடைக்கால அரசை அமைப்பதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் தனது கூட்டணி கட்சியினரிடையே தொடர்ந்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கூட்டணியில் இருந்து விலகி சுயேச்சையாக செயல்பட்டு வரும் 42 எம்.பி.க்களுடன் கோத்தபய ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அனைத்துக்கட்சி இணைந்த இடைக்கால அரசில் பங்கேற்க வருமாறு அப்போது அவர் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்ட முடியாமல் தோால்வியில் முடிந்தது.
இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.க்கள் குழுவை சேர்ந்த வாசுதேவ நானயக்காரா, ‘11 அம்சங்களை கொண்ட எங்கள் பரிந்துரைகளை முன்வைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்’ என தெரிவித்தார்.
இதைப்போல மற்றொரு எம்.பி.யான அனுரா யாபா, நாட்டின் தற்போதைய நிலை குறித்து இருதரப்பும் விவாதித்ததாகவும், இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
முன்னதாக இந்த எம்.பி.க்கள் அனைவரும் பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து பேசினர். அப்போது முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் உடனிருந்தார்.
இவ்வாறு இடைக்கால அரசு அமைப்பதில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாக இலங்கையில் புதிய மந்திரிகள் பதவியேற்பது மேலும் தள்ளிப்போகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி நடைபெறும் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. சமூக வலைத்தளம் மூலம் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஒருங்கிணைத்து வரும் இந்த போராட்டம் இரவு-பகலாக நடந்து வருகிறது.
தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபரின் செயலகம் அருகே நடந்து வரும் இந்த போராட்டத்துக்காக தற்காலிக கூடாரங்கள், பந்தல்கள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.
அங்கு போராட்டக்காரர்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதைப்போல நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.
கொழும்புவில் போராட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர் ஒருவர் கூறும்போது, ‘இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இளைய சமூகத்தினர் ஆவர். கடந்த 74 ஆண்டுகளாக நாட்டில் நிகழ்ந்துள்ள அரசியல் தவறுகளுக்கு ஆள்வோர் பொறுப்பேற்க வேண்டும்’ என தெரிவித்தார்.
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம் நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்றும், இன்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்தவே இந்த விடுமுறை வழங்கப்பட்டு இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.