கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகன் பாலியல் வழக்கு விவகாரத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு ஆதரவாக பேசுவது போல் கருத்து தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி ஏப்ரல் 4ம் தேதி இரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் மகன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள சென்றவர், மறுநாள் அதிகாலையே வீடு திரும்பியுள்ளார். ஆனால், உடல்நலம் குன்றிய நிலையில் வீடு திரும்பிய அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேநாளில் அவரின் உடல் தகனமும் செய்யப்பட்டது.
ஐந்து நாட்கள் கழித்து சிறுமியின் தந்தை போலீஸில் இறப்பு தொடர்பாக புகார் செய்தார். அதில், “எனது மகளை எந்த அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லவோ அல்லது இறப்பு தொடர்பாக போலீஸில் புகார் செய்யவோ கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் குடும்பத்தினர் மிரட்டினர். இதனால் எனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதனால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அம்மாநில ஊடகங்கள், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியிட்டன.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் தெரிவித்துள்ள கருத்து இப்போது சர்ச்சையாகியுள்ளது. “என்ன நடந்தது என்று காவல்துறைக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் சிறுமி இறந்தார் என ஊடகங்கள் தொடர்ந்து சொல்கிறார்கள்.
சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா, அல்லது அது ஒரு காதல் விவகாரமா என்பதை ஊடகங்கள் விசாரித்ததா.. நான் இதை ஒரு காதல் விவகாரம் என்று கேள்விப்பட்டேன். எனக்கு கிடைத்த தகவல்படி, சிறுமி ஏப்ரல் 5ம் தேதி இறந்துள்ளார். ஆனால், ஏப்ரல் 10ம் தேதி தான் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இறந்த அன்றே ஏன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், இறந்த அதே நாளில் உடல் தகனம் செய்துள்ளனர். தகனம் செய்ததால் இந்த வழக்கில் காவல்துறைக்கு ஆதாரம் எங்கே கிடைக்கும். ஒரு சாதாரண மனிதனாக நான் இதை கேட்கிறேன்.
ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதை தடுப்பது எனது வேலையும் இல்லை. அது எனது கட்டுப்பாட்டிலும் இல்லை. மேலும் இது இது உத்தரப் பிரதேசமும் அல்ல. அங்கு போல் இங்கு ‘லவ் ஜிஹாத்’ திட்டத்தைத் தொடங்குவதற்கு” என்று பேசினார். மம்தாவின் கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில். ஆளுநர் ஜக்தீப் தங்கர், இந்த வழக்கு தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டுள்ளார்.