மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் பிரித்வி ஷா விளையாடி வருகிறார். டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் அவர் நேற்றைய போட்டியில் கூட அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் பிரித்வி ஷா குறித்து பேசியுள்ளார்.
பிரித்வி ஷா குறித்து அவர் பேசுகையில், “அவர் ஆடுவதைப் பார்க்கும் போது என்னிடம் நான் ஆடும்போது என்னென்ன திறமைகள் இருந்ததோ அத்தனையும் உள்ளதைப் பார்த்து மகிழ்ந்தேன். பிரித்வி ஷாவை இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகள் ஆடும் வீரராக நான் உருவாக்கி விட்டால் என் பணி முடிந்தது என்ற மனநிறைவுடன் நான் பணி செய்ததாக எனக்கு திருப்தி ஏற்படும்.
நான் சுற்றியிருக்கும் அணிகளைத் திரும்பிப் பார்த்தால், நான் மும்பை இந்தியன்ஸை பயிற்சியளித்த போது, ரோஹித் மிகவும் இளமையாக இருந்தார். நான் அங்கு பயிற்சியளித்த நிறைய வீரர்கள் இப்போது இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள், அதைத்தான் நான் இங்கே செய்ய விரும்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.